×

ஏரிக்கால்வாய் அமைத்து சாத்தனூர் அணை தண்ணீர் வழங்கக்கோரி தண்டராம்பட்டு அருகே பரபரப்பு

தண்டராம்பட்டு, பிப்.26: தண்டராம்பட்டு அருகே ஏரிக்கால்வாய்கள் அமைத்து சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி கடைகளை அடைத்து, கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் ஊராட்சியில் பெரிய ஏரி மற்றும் மல்லிகாபுரம் ஏரி உள்ளது. புகழ்பெற்ற சாத்தனூர் அணை அமைந்துள்ள ஊராட்சியில் இந்த ஏரிகள் இருப்பினும், பருவமழையை நம்பி மட்டுமே உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் ஏரிகள் தற்போது வறண்டு காணப்படுகிறது. இதனால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் குடிநீருக்கும், பாசனம் செய்வதற்கும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். அணை அமைந்துள்ள ஊராட்சியில் வசிக்கும் தங்களுக்கு சாத்தனூர் அணையினால் எந்த பயனும் இல்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, ஏரிக்கால்வாய்களை புதிதாக அமைத்து சாத்தனூர் அணையில் இருந்து பெரிய ஏரி மற்றும் மல்லிகாபுரம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை வற்புறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் வேதனையடைந்த சாத்தனூர் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நேற்று, அங்குள்ள அனைத்து கடைகளையும் அடைத்து, பஸ் நிறுத்தம் அருகே ஒருநாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், சாத்தனூர் அணை கட்டி முடித்து 60 ஆண்டுகள் ஆகியும், எங்கள் ஊராட்சியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் நிலங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளது. எனவே, ஏரிக்கால்வாய்களை அமைத்து சாத்தனூர் அணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்' என்றனர். விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் திடீர் உண்ணாவிரத போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
(

Tags : Dandarambattu ,lake ,Sathanur Dam ,
× RELATED தண்டராம்பட்டு அருகே நீர்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி துவக்கம்