×

மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க மாரியம்மன் கோயில் இடிப்பு

திருப்பூர், பிப். 26:  திருப்பூர் காங்கயம் ரோடு காளியப்பா நகர் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இதில் ஒரு பகுதியில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாரியம்மனுக்கு கோயில் கட்டி வழிபட்டு வந்தனர். இந்நிலையில், மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட உள்ளதால், மாரியம்மன் கோயில் அகற்றப்படும் எனவும், சிலையை வேறு இடத்தில் வைத்துக்கொள்ளும்படியும் மாநகராட்சி தரப்பில் பலமுறை அறிவுறுத்தப்பட்டு வந்தது.  இந்நிலையில் நேற்று அப்பகுதிக்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் கோயிலை பொக்லைன் எந்திரத்தால் இடித்து அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு திரண்டு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கோயிலுக்கு அப்பகுதியிலேயே வேறு இடத்தை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாநகராட்சி அதிகாரிகளும், உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



Tags : Demolition ,Mariamman Temple ,
× RELATED ராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன்...