சேலம், தர்மபுரியில் 3ஆண்டாக விவசாயிகளிடம் மாங்காய் வாங்கி ₹4 கோடி மோசடி

சேலம், பிப்.26: சேலம், தர்மபுரி விவசாயிகளிடம் மாங்காய் வாங்கிய மண்டி உரிமையாளர், அதற்கான பணம் ₹4கோடியை மோசடி செய்து விட்டதாக  போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளிடம் மாங்காய் வாங்கி கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக ₹4 கோடி பணம் தராமல் ஏமாற்றி வரும் சேலத்தை சேர்ந்த மாங்காய் மண்டி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். ஆனால்,  அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்  போராட்டத்துக்கு அனுமதி மறுத்தனர். மேலும், மாநகர போலீஸ் கமிஷனரிடம் இது குறித்து புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்றனர். கமிஷனர் செந்தில்குமாரை சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பது: சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள 100க்கும் மேற் பட்ட மாங்காய் வியாபாரிகளிடம் இருந்து சேலத்தை சேர்ந்த மாங்காய் மண்டி உரிமையாளர் மாங்காய் பெற்று வந்தார். மாங்காய் வாங்கி கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக ₹4 கோடி பணம் தராமல் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து, தமிழக முதலமைச்சரை சந்தித்து மனு அளித்தோம். இதனையடுத்து மாநகர போலீசார் விசாரணை நடத்தினர். மண்டி வியாபாரியை அழைத்து விசாரித்து பின்பு அனைவருக்கும் காசோலை வழங்கினார். ஆனால், அந்த காசோலை அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திரும்ப வந்தது. இதுகுறித்து மீண்டும் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தோம். இதுவரை சம்பந்தப்பட்டவர்களுக்கு பணம் தரவில்லை. எனவே மாங்காய் விவசாயிகளை ஏமாற்றிய மண்டி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து அவரது அசையும், அசையா சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: