×

இடைப்பாடி நகராட்சியில் வாடகை செலுத்தாத 11 கடைகளுக்கு சீல்

இடைப்பாடி, பிப். 26: இடைப்பாடி நகராட்சியில், வாடகை செலுத்தாத 11 கடைகளை நேற்று அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் பொதுமக்கள் குடிநீர் கட்டணத்தை செலுத்தாவிடில், இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்டம் இடைப்பாடியில் பஸ் நிலையம், மேட்டுத்தெரு, வெள்ளாண்டி வலசை ஆகிய பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமாக 118 வணிக கடைகள் உள்ளன. இந்த நகராட்சி கடைகளை  ஏலம் எடுத்து நடத்தி வரும் வியாபாரிகள், கடைக்கான வாடகையை சரிவர செலுத்துவது இல்லை. நிலுவையில் உள்ள வாடகையை செலுத்தும்படி, கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் சென்னகிருஷ்ணன் பல முறை தகவல் தெரிவித்தும், எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் கொடுத்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து நேற்று காலை, நகராட்சி வருவாய் ஆய்வாளர் செங்கோட்டுவேல் தலைமையில் சென்ற இளநிலை உதவியாளர் பழனிசாமி மற்றும் நகராட்சி அலுவலர்கள், வாடகை பாக்கி செலுத்தாத 11 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். நகராட்சி பகுதியில் பலர் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். உடனடியாக குடிநீர் கட்டணத்தை செலுத்த தவறினால், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் சென்ன கிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags : shops ,municipality ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி