×

கபிலர்மலையில் தென்னை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விளக்க பயிற்சி

பரமத்தி வேலூர், பிப்.26: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கபிலர்மலை வட்டார தென்னை விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்த தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிலிக்கல்பாளையத்தில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கான தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்த கருத்தரங்கு மற்றும் தென்னையை தாக்கும் வண்டுகள், அதன் வாழ்க்கை சுழற்சி முறை, முட்டையிலிருந்து கூட்டுப்புழு வரை தென்னையை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த விளக்கப்பட கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சி அரங்கை வேளாண் இணை இயக்குனர் சேகர் திறந்து வைத்தார். மேலும், தஞ்சை மாவட்டம் வேப்பங்குளத்தில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் கார்த்திகேயன் விளக்கி பேசினார். அப்போது, தென்னையில் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிகளான காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு மற்றும் வெள்ளை பூச்சியினால் ஏற்படும் இழப்புகள் குறித்தும், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வழிமுறைகளையும் காணொலி காட்சி மூலம் விளக்கினார்.

மேலும், தென்னை மரங்களை பாதுகாப்பது மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்தும் விரிவாக விளக்கினர். தொடர்ந்து நாமக்கல் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் ஜெகதீசன் மத்திய திட்டங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள், அதன் மூலம் மேம்படும் விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் குறித்து விளக்கமளித்தார். வேளாண்மை துறை திட்டங்கள், குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி விளக்கினார். தென்னையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி செய்வது குறித்து மாரியம்மன் உழவன் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். தொடர்ந்து மண் பரிசோதனையின் முக்கியத்துவம் பற்றி வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி மற்றும் தனலட்சுமி விவசாயிகளிடையே எடுத்துக் கூறினர். ஏற்பாடுகளை கபிலர்மலை வட்டார உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர், உதவி தொழில்நுட்ப மேலாளர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags : Coconut Farmers ,
× RELATED தமிழ்நாடு முழுக்க தென்னை விவசாயிகள்...