×

சுமை தூக்கும் பணிகளில் 5 ஆயிரம் வடமாநிலத்தவர்கள் உள்ளூர் தொழிலாளர்கள் வேலைக்கு ஆபத்து

திருப்பூர், பிப்.26: திருப்பூர்  மாநகர், புறநகர் பகுதியில் உள்ள வணிக வளாக சந்தைகளில்  வடமாநிலங்களிலிருந்து 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுமைதுாக்கும் பணிகளுக்காக  வேலைக்கு அமர்த்தியுள்ளனர். உள்ளூர் சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு  எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள்  கவலை தெரிவித்துள்ளனர்.திருப்பூர், கோவை ஆகிய தொழில் நகரங்களில்  பஞ்சாலைகள், மோட்டார் உற்பத்தி நிறுவனங்கள், இரும்பு உருக்கு  தொழிற்சாலைகள், பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் என பல  ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள்  இயங்கி வருகிறது. நுால்  பண்டல்கள், துணி பண்டல்கள், இயந்தரங்களின் உதிரிபாகங்கள் லாரிகள் ஏற்றி,  இறக்குவது, சிமென்ட், அரிசி, சக்கரை, மக்காச்சோளம் உட்பட தானிய மூட்டைகளை  ஏற்றி, இறக்க ஆயிரக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளர்கள் செய்து வந்தனர்.  சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., எம்.எல்.எப், ஐ.என்.டி.யு.சி. என  பல்வேறு சங்கங்களில் ஆயிரக்கணக்கான சுமை துாக்கும் தொழிலாளர்கள்  உறுப்பினர்களாக உள்ளனர். மூன்று ஆண்டுக்கு ஒரு முறை சுமைக்கூலியை  அதிகரித்து வர்த்தக நிறுவனங்களில் ஏற்று, இறக்கு கூலி வாங்கி வந்தனர்.  தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்களுக்கு சுமை ஏற்றி, இறக்கு செலவு தொகை  அதிகமாக இருப்பதாக கருதி வந்தனர்.

இந்நிலையில், தொழில் நிறுவனங்கள்,  வர்த்தக நிறுவனங்களில் சுமைகளை ஏற்றி, இறக்க மாத சம்பளத்திற்கு வடமாநிலங்களிலிருந்து தொழிலாளர்களை அழைத்து   வந்து தங்களுடைய தொழில்  நிறுவனங்களில் தங்க வைத்துள்ளனர். இவர்களுக்கு மூன்று வேலை உணவு, இருப்பிடம்  இலவசமாக கொடுத்து குறைந்த பட்ச ஊதியம் வழங்கி வருகின்றனர். இவர்களை சுமை  ஏற்றி, இறக்குவதோடு மற்ற வேலைகளுக்கும் பயன்படுத்திக்கொள்கின்றனர். இதனால், கடந்த சில ஆண்டுகளாக சுமை தூக்கும் தொழிலுக்கு தமிழக தொழிலாளர்கள் யாரும் முன்  வருவதில்லை. இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவு சுமை தூக்கும் பணிகளில்  ஈடுபட்டால் எதிர்காலத்தில் தமிழக சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு வேலை  வாய்ப்புகள் பறிபோகும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை  தெரிவித்துள்ளனர்.இது குறித்து தொழிற்சங்க பிரதிநிதியும், சி.பி.எம். தாலுகா செயலாளர் கனகராஜ் கூறியதாவது:- தமிழகம்  முழுவதும் சுமை துாக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து  வருகிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் மதுபோதைகளுக்கு அடிமையாகியதால் பல  குடும்பங்கள் இன்னல்களுக்கு உள்ளானது.

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி  மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் மதுபோதை, போதை பொருட்கள்  ஆகியவற்றிற்கு அடிமையாகியுள்ளனர். இதனால், உடல் வலுவிழந்துள்ளது. இதனால்  கடுமையாக உழைக்க முடிவதில்லை.
தமிழகத்தில் மதுவிலக்கு அமுல்படுத்தினால்  மட்டுமே எதிர்வரும் மனித சமூதாயம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வாய்ப்பு  உள்ளது. சுமை தூக்கும் பணிகளுக்கு தமிழக தொழிலாளர்கள் ஆர்வம் காட்டாததால்  வடமாநிலங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழைத்து வந்து வேலை  கொடுத்துள்ளது வேதனை அளித்தாலும், மறுபுறம் தொழில் நிறுவனங்களின்  பொருட்களை ஏற்றி, இறக்கும்  பணியை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எதிர்காலத்தில் தமிழகத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இல்லாத சூழ்நிலை  வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வடமாநில சுமை தூக்கும் தொழிலாளர்கள் சொன்ன  வேலையை செய்து முடிக்கின்றனர். குறைவான சம்பளத்திற்கு  வேலை செய்கிறார்கள். தமிழகத்தில் இருக்கக்கூடிய சுமை துாக்கும் தொழிலாளர்கள்  உடல் நிலத்தில் அக்கரை செலுத்தி உடல் வலிமையுடன் இருந்து அடுத்த  தலைமுறைக்கும் நலக்க கருத்தை கூறி உடல் வலிமையோடு இருக்க அறிவுறுத்தினால்  மட்டுமே சுமை துாக்கும் தொழிலாளர்கள் தொடர் வாய்ப்பு இருக்கும்.  இல்லையெனில், தமிழகத்தில் சுமை தூக்க வட மாநில தொழிலாளர்களை நம்பி இருக்க  வேண்டிய அபாயம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Thousand Northern Territories ,Local Workers ,
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்