×

இறந்த குட்டி யானை அருகே இருந்து 9 நாட்களுக்கு பின் வெளியேறிய தாய் யானை


கூடலூர், பிப். 26: நீலகிரி  மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட  கொச்சு குன்னு தனியார் எஸ்டேட்   பகுதியை ஓட்டி வனப்பகுதியில் கடந்த 17ம் தேதி குட்டி யானை இறந்து  கிடந்ததையும், அதன் அருகே மூன்று யானைகள் நிற்பதையும் வனத்துறையினர்  பார்த்துள்ளனர்.  தாய் யானை உள்ளிட்ட யானைகள் வனத்துறையினரை விரட்ட  துவங்கியதால் அருகில் நெருங்க முடியவில்லை. இந்த நிலையில் மறுநாள் துவங்கி  நேற்று முன்தினம் வரை தாய் யானை தொடர்ந்து 9 நாளாக  குட்டியின்  அருகிலேயே நின்றதால் இறந்த குட்டியை உடற்கூறு செய்ய முடியாத நிலை  ஏற்பட்டது. இருந்த போதிலும், அப்பகுதியில் வனத்துறையினர் இரவு பகலாக  கண்காணிப்பிலும் ஈடுபட்டு வந்தனர். தாய் யானை குட்டியை விட்டு அகன்ற பின்னரே உடற்கூறு ஆய்வு செய்வது என வனத்துறையினர் முடிவு செய்திருந்தனர்.

 இந்த  நிலையில் நேற்று காலையில் அப்பகுதிக்கு வனத்துறையினர் சென்றபோது தாய்  யானை அங்கு வரவில்லை. மதியம் வரை காத்திருந்த வனத்துறையினர்  தாய் யானை  அங்கிருந்து சென்றதை உறுதி செய்தனர். பின்னர் குட்டியின் அருகில் உதவி  வனப்பாதுகாவலர் விஜயன், வனச்சரகர் ராமகிருஷ்னன், கால் நடை மருத்துவர்  நந்தினி மற்றும் வனக்குழுவினர் சென்று இறந்த குட்டியை ஆய்வு செய்தனர். குட்டி  இறந்து 10 நாட்கள் ஆகி இருக்கலாம் என்பதால் உடல் அழுகி உடற்கூறு பரிசோதனை  செய்ய முடியாத மோசமான நிலையில் இருந்ததாகவும், இது சுமார் ஒரு வயதுள்ள பெண்  யானைக் குட்டி என்றும் வனத்துரையினர் தெரிவித்தனர்.


Tags : area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...