×

மாலை 6 மணி வரை சிறப்பு வகுப்புக்கள் தொலைதூர கிராம மாணவர்கள் அவதி

ஊட்டி, பிப். 26: பொது தேர்வு நெருங்கிய நிலையில், மாலை 6 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடப்பதால் தொலை தூரங்களுக்கு செல்லும் மாணவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.பிளஸ்2 பொது தேர்வு ஓரிரு நாட்களில் துவங்க உள்ளது. இதனால், பெரும்பாலான பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சில பள்ளிகளில் 11 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. பெரும்பாலான பள்ளிகளில் மாலை 6 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.  ஊட்டியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கிராமப் புறங்களில் இருந்து வருகின்றனர். இவர்கள் மாலை 6 மணிக்கு மேல் பள்ளியில் இருந்து பஸ் ஸ்டாப்பிற்கு வருகின்றனர். அங்கிருந்து தங்களது கிராமங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால், சில சமயங்களில் கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் குறித்த நேரத்திற்கு வராத நிலையில், வெகு நேரம் மாணவர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

தற்ேபாது நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் காட்டு மாடுகள், கரடி, சிறுத்தை கலாட்டா அதிகரித்துள்ளது. பெரும்பாலான கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் பஸ்சை விட்டு இறங்கிய பின், தங்களது வீடுகளுக்கு தேயிலை தோட்டம், காய்கறி தோட்டம் மற்றும் காட்டுப் பகுதி வழியாக செல்ல வேண்டியுள்ளது. மாணவர்களுக்கு பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. எனவே, மாணவர்கள் நலன் கருதி மாலை 5 மணிக்குள் வகுப்புக்களை முடித்துவிட்டு, மாணவர்களை பள்ளியில் இருந்து அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : classes ,village students ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் தனியார்...