×

மாவட்டத்தில் சிறப்பு கிராமசபை கூட்டங்கள்

கடத்தூர், பிப்.26:  தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கடத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒசஅள்ளி ஊராட்சியில், நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பெண்கள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு, விவசாயிகளின் நலனுக்காக செயற்கை உரங்களை தவிர்த்து உயிர் உரங்களை பயன்படுத்தி அதிக மகசூலை பெறுதல் குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும், வரும் 28ம் தேதி முதல் அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடைபெறும் முகாம்களில் அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடத்தூர் அருகே தாளநத்தம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் பாப்பாத்தி பாலு தலைமை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தல், மின்விளக்கு அமைத்தல், 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு அட்டை வழங்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் கந்தம்மாள்சேட்டு தலைமை வகித்தார். இதில் கிராம ஊராட்சி அளவில் பல்லுயிர் பெருக்க மேலாண்மை குழு, குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், கோமாரி நோய்த் தடுப்பு பணிகள் மேற்கொள்வது சம்பந்தமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத்தலைவர் சுதா மாயக்கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் மாதையன், ஊராட்சி செயலாளர் ஜெயராமன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல், ஏலகிரி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் மணி தலைமை வகித்தார். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. துணைத்தலைவர் தேவசுந்தரி நாகலிங்கம் மற்றும் ஊராட்சி செயலாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : meetings ,Special Gram Sabha ,district ,
× RELATED மோசமான வானிலை மபியில் தங்கினார் ராகுல் காந்தி