×

நகராட்சியில் குடிநீர் வரி 4கோடி நிலுவை

தர்மபுரி, பிப்.26:  தர்மபுரி நகராட்சியில் குடிநீர்வரி ₹4கோடி நிலுவை வசூலிக்க ஆணையர் வீடு, கடைகள் மற்றும் தெருக்களில் உள்ள பொது குடி நீர் குழாய்கள் என 82குடிநீர் இணைப்புகள் அதிரடியாக துண்டிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தினசரி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு இடங்களிலிருந்து நகராட்சி பகுதிக்கு வந்து செல்கின்றனர். நகராட்சியில் சுமார் 10ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் மூலம், நகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டம் நகர மக்களுக்கு வழங்குவது நிறுத்தப்பட்டது. பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதி மக்களுக்கு பஞ்சப்பள்ளி குடிநீர் திருப்பிவிடப்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது.
தினசரி 7.5 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 2 நாளைக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்ட நிர்வாகத்திடம், மாதம் 50 லட்சம் செலுத்தி குடிநீர் பெறப்படுகிறது. இந்ததொகை மக்களிடம் இருந்து வரியாக வசூலிக்கப்படுகிறது. நடப்பாண்டு குடிநீர் வரி 4 கோடி நிலுவையில் உள்ளது. இந்த நிலுவை தொகைகளை வசூலிக்க, நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வீடு வீடாக சென்று வரி வசூலிப்பில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பும் தனித்தனியாக வழங்கப்படுகிறது. புதிய குடிநீர் இணைப்பு தவணை முறையில் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய குடிநீர் இணைப்பு, இதுவரை 1000ம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆயிரம் குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் குடிநீருக்கான மீட்டர் பொருத்தவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் குடிநீர் விநியோகம் தொழில்நுட்ப ரீதியாக முறைப்படுத்தப்பட உள்ளது. நகராட்சி 33 வார்டுகளில் உள்ள தெரு குடிநீர் குழாய்கள் துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று வரை தெருவில் உள்ள 12 பொது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்கு குடிநீர் வரி செலுத்தாத 70 வீடு, கடைகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் அதிரடியால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார் கூறுகையில், தர்மபுரி நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, தினசரி 135 லிட்டர் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பஞ்சப்பள்ளி அணையில் இருந்து, நகராட்சிக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது. ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் மட்டுமே தற்போது கைகொடுத்து வருகிறது. ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு பணம் செலுத்தினால் மட்டுமே குடிநீர் வழங்குவார்கள். நகராட்சி மக்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் 11.50க்கு வாங்கி 5.50க்கு வழங்குகிறோம். இந்த தொகை வரியாக மக்களிடம் இருந்து வசூலிக்கிறோம்.
மக்களுக்கும் சரியாக குடிநீர் வரி செலுத்து முன்வருவதில்லை. இதனால் வரி வசூலிப்பும், குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். மின்மோட்டார் வைத்து, குடிநீர் எடுத்தால் மோட்டார் பறிமுதல் செய்யப்படும். மோட்டாரை திருப்பி தரமாட்டோம். குடிநீர் நிலுவை தொகை மட்டும் ₹4கோடி உள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக தனிநபர்கள் அதிக பட்சமாக 73 ஆயிரத்தில் இருந்து 23 லட்சம் வரை குடிநீர் வரி நிலுவையில் உள்ளது. இதில் சிலர் வரியை குறைக்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனாலும் நிலு வை யில் உள்ளது என்றார்.

Tags : municipality ,
× RELATED சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை