×

ஆலந்தூர், மீனம்பாக்கம் பகுதிகளில் கிடப்பில் சுரங்கப்பாதை பணிகள்

ஆலந்தூர், பிப். 26: ஆலந்தூர், மீனம்பாக்கம் பகுதிகளில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை பெரும்பூதூர் மக்களவை தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பாலு, ரயில்வே துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரயில்வே துறையினரால் தொடங்கப்பட்ட பல்வேறு கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆலந்தூர் பச்சையம்மன் ரயில்வே கேட் சுரங்கப்பதை, ஏஜெஎஸ் நிதி பள்ளி அருகில் நடை மேம்பாலம், மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி அருகில் சுரங்கப்பாதை  ஆகிய பணிகள், பள்ளம் தோண்டிய நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என பொதுமக்கள் மற்றும் நலச்சங்கத்தினர் டி.ஆர்.பாலு எம்பியிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், டி.ஆர்.பாலு எம்பி, தென் மண்டல ரயில்வே துணை மேலாளர் மகேஷ் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று நேரில் சென்று  ஆய்வு செய்தார். அவருடன் மாநிலங்களவை  உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் சென்றனர்.

ஆய்வின்போது, கிடப்பில் போடப்பட்டுள்ள  ரயில்வே சுரங்கப்பாதை மற்றும் நடைமேம்பால பணிகளை  விரைந்து முடிக்கவும், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் உள்ள  பகுதிநேர டிக்கெட் கவுன்ட்டரை  முழுநேர கவுன்ட்டராக மாற்ற கோரியும்  டி.ஆர்.பாலு எம்பி ரயில்வே  அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது ஆலந்தூர் திமுக பகுதி செயலாளர்கள் பி.குணாளன், என்.சந்திரன், பொதுக் குழு உறுப்பினர் ஆர்.டி.பூபாலன், நிர்வாகிகள் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், சீனிவாசன், கே.பி.முரளிகிருஷ்ணன் உள்பட பலர் இருந்தனர்.

Tags : Mining tunnel ,areas ,Alandur ,Meenambakkam ,
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்