×

உத்திரமேரூர் ஒன்றியத்தில் அவலம் செயல்படாத திடக்கழிவு மேலாண்மை திட்டம்

உத்திரமேரூர், பிப். 26: உத்திரமேரூர் ஒன்றியத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் சுற்றுப்புறத் தூய்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு, இயற்கை உரம் தயாரிப்பு, மழைநீர் சேகரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டம், கிராமங்களில் உள்ள குடியிருப்புகள், கடைகள், தொழிற்கூடங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் உள்ள குப்பைகளை சேகரித்து, அதனை மட்கும் குப்பை, மட்கா குப்பை என தரம் பிரித்து, மட்கும் குப்பையில் இருந்து இயற்கை உரமும், மட்கா குப்பையை மறு சுழற்சி செய்து, பல்வேறு தயாரிப்புகளுக்கு பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டது. இதற்கான குப்பைகளை சேகரிக்க, கிராமத்தின் ஒதுக்குபுறத்தில் 3 குழிகள் அமைக்கப்பட்டு, குப்பையை தரம் பிரித்து, அந்தந்த குழிகளில் தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளவேண்டும். இப்பணிக்கு அந்தந்த கிராமங்களில் ‘தூய்மை காவலர்கள்’ நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஊதியம் முதல் கை கால் உறைகள், சீருடைகள் குப்பைகளை சேகரிக்க தள்ளுவண்டிகள் என அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில் கிராமங்களின் சுற்றுப்புறங்கள் தூய்மையாவதுடன், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் நீர்நிலைகளை பாதுகாத்து இயற்கை உரம் தயாரிக்க இத்திட்டம் ஏதுவாக அமைந்தது.

இந்நிலையில், இந்த திட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் முறையாக செயல்படுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் காவனூர்புதுச்சேரி கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் சார்பில் கடந்த 2016ம் ஆண்டு அரசு ஒரு கனிசமான தொகையை ஒதுக்கி, ஒதுக்குபுறத்தில் 3 குழிகள் அமைக்கப்பட்டன. இதனை சம்பந்தபட்ட அதிகாரிகள் முறையாக கவனிக்காததால், கிராமத்தில் வெட்டப்பட்ட 3 குழியிலும், பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல் தேங்கியுள்ளன. இதனால் மழை காலங்களில் மழைநீர் பிளாஸ்டிக் கழிவுகளில் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவுவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இத்திட்டத்துக்காக அரசால் வழங்கப்படும் தொகையை சம்பந்தபட்ட அதிகாரிகள் முறையாக பயன்படுத்தாததால், இத்திட்டம் கண் துடைப்பாகவே உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இத்திட்டம் முறையாக செயல்படாததால் கிராமத்தில் சுற்றுப்புற தூய்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு, நிலத்தடி நீர்மட்டம் பாதுகாப்பு மற்றும் இயற்க்கை உரம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் கேள்விக்குறியாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, இப்பணியினை உடனடியாக முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு