×

அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா தேவாலயம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக வழக்கு

சென்னை, பிப். 26: அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள  தேவாலயத்தை  அகற்ற கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் மழைமலை மாதா தேவாலயம் அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள 55 ஏக்கர் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயத்தை   அகற்ற கோரி செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கத்தை சேர்ந்த ராஜா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், மலைக்குன்றில் உள்ள அரசு நிலத்தில் உள்ள  ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தமிழக அரசுக்கும், தொல்லியல்  துறைக்கும் புகார் அளித்தும்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் மலையை வெடிவைத்து தகர்த்து படிக்கட்டுகளையும், கடைகளையும் அமைத்துள்ளதால்,  இயற்கையை நம்பியுள்ள வன உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  அதனால் அவை ஊருக்குள் நுழையும் அபாயம் உள்ளது. எனவே, தேவாலயத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள்,   தமிழக அரசு, தொல்லியல் துறை, மழைமலை மாதா தேவாலய நிர்வாகம்  ஆகியவை பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : state land ,Aruzuppakkam ,
× RELATED தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை...