மஞ்சூர் அருகே கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டும் கரடி

மஞ்சூர், பிப்.26:  மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கரடி ஒன்று பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இரவு நேரங்களில் உலா வரும் கரடி சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோயில்கள், பேக்கரிகள், டீ கடைகள், பட்டறைகளின் கதவு, ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சூறையாடி செல்வது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் ஓணிகண்டி பகுதியில் பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த மாணவர்களை கரடி விரட்டியது. இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அட்டகாசம் செய்யும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா அறிவுறுத்தலின் பேரில் குந்தா ரேஞ்சர் பாண்டியராஜன் மேற்பார்வையில் கரடியை பிடிக்க ஓணிகண்டி பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது.

இந்த கூண்டுக்குள் கடந்த 4 நாட்களாக பலாப்பழம், அன்னாசிபழம் உள்ளிட்ட தின்பண்டங்களை வைத்து இரவு பகலாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் அப்பகுதியிலேயே நடமாடி வரும் கரடி வனத்துறையினரின் கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. ஓரிரு தினங்களில் அட்டகாச கரடி கூண்டுக்குள் சிக்கி விடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: