தமிழக வன நிலத்தில் யானை மேய்ச்சலுக்கு ‘100 ரூபாய்’ கட்டணம்

கோவை, பிப்.26: தமிழக வனப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3-3-2000ம் ஆண்டில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணையில் (எண் 47) வனத்தில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு அனுமதி வழங்கி கட்டணம் விதிக்கப்பட்டது. இதில் வெள்ளாடு, செம்மறியாடுகள், மாடு, எருமைகளுக்கு அனுமதி இலவசம். கழுதை, குதிரைக்கு 10 ரூபாய், ஒரு யானைக்கு 100 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 8-8-2006ம் ஆண்டில் வனத்துறையின் புதுப்பிக்கப்பட்ட  அரசாணையில் (எண்: 78) இதே கட்டண நடைமுறை குறிப்பிடப்பட்டது. சம்பந்தப்பட்ட வனச்சரக அலுவலகம் அல்லது மாவட்ட வன அலுவலகத்தை அணுகி மேய்ச்சலுக்கான அனுமதி பாஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய வன அமைச்சரகம் வன நிலத்தில் மேய்ச்சலுக்கான நடைமுறைகள், விதிகளை மாற்றியும் தமிழக வனத்துறை நிர்வாகம் மேய்ச்சலுக்கான உத்தரவில் எந்த மாற்றமும் செய்யவில்லை. பழைய அரசாணையின்படி சில பகுதிகளிலும், உள்ளூர் வனத்துறையினர் அதிகாரத்தில் சில பகுதிகளிலும் கால்நடை மேய்ச்சலுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் கழுதை, குதிரை, யானை மேய்ச்சலுக்கான கட்டண நடைமுறை வியப்பை ஏற்படு–்த்தியுள்ளது.

இது தொடர்பாக வன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தமிழக வனத்தில் சுமார் 4,700 யானைகள் இருக்கின்றன. தமிழக கோயில்கள், மடங்களில் 37 வளர்ப்பு யானைகள் உள்ளன. இந்த வளர்ப்பு யானைகளுக்கு சமீபத்தில் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டது.  இது தவிர சுமார் 20 யானைகளை தனியார் அமைப்புகள் தங்களது பண்ணை, கோயில்களில் வளர்த்து வருகின்றன. தமிழகத்தில் கோயில் விழாக்காலங்களில் கேரள மாநிலத்தில் இருந்து வளர்ப்பு யானைகளை ஊர்வலத்திற்காக அழைத்து வருகிறார்கள்.

கடந்த காலங்களில் வளர்ப்பு யானைகள் வனத்தில் மேய்ச்சலுக்கு விடும் நடைமுறை இருந்தது. இதற்காக கட்டணம் விதிக்கப்பட்டது. தற்போது வளர்ப்பு யானை மேய்ச்சல் நடைமுறை இல்லாமல் போய்விட்டது. கழுதை, குதிரைகள் வனத்தில் மேய விடுவது கிடையாது. ஆடு, மாடு, எருமை போன்ற கால்நடை மேய்ச்சலுக்கு பெரும்பாலான வன நிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பழைய அரசாணை மட்டும் பெயருக்கு இருக்கிறது. ஆனால் இந்த அரசாணை நடைமுறையில் இல்லை’’ என்றார்.

Related Stories: