மருத்துவக்கழிவுகள் மேலாண்மை அங்கீகாரம் பெறாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்

ஈரோடு, பிப். 26:   மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகளின் கீழ் அங்கீகாரம் பெறாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என சுற்றுச்சூழல் பொறியாளர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் இது குறித்து கூறியுள்ளதாவது:- சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதியானது கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி அறிவிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், புறநோயாளிகள் பிரிவு, கால்நடை மருத்துவமனைகள், விலங்கினங்களின் சோதனை கூடங்கள், நோயியல் ஆய்வகங்கள், ரத்த வங்கிகள், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா ஓமியோபதி மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு இந்த விதி பொருந்தும். மேலும் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்கள், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முகாம்கள், தடுப்பூசி முகாம்கள், ரத்ததான முகாம்கள், பள்ளிகளின் முதலுதவி  அறைகள், தடயவியல் ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் ஆகியவற்றிற்கும் இந்த விதி பொருந்தும்.  மேலும் மருத்துவ கழிவுகளை கையாளும் அனைத்து மருத்துவ நிறுவனங்களும் படிவம் 2ல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு விண்ணப்பம் செய்து படிவம் 3ல் அங்கீகாரம் பெறப்பட வேண்டும். அத்தகைய அங்கீகாரத்தில் காலாவதியாகும் தேதி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினால் வழங்கப்படும், இசைவாணையுடன் ஒத்திசைவு செய்யப்பட்டு வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவம் சார்ந்த நிறுவனங்களும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நீர் மற்றும் காற்று மாசு தடுப்பு விதிகளின்கீழ் இசைவாணையையும் மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளின்கீழ் அங்கீகாரத்தினையும் உடனடியாக விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். படுக்கை வசதி இல்லாத மருத்துவ நிறுவனங்கள் தாமதமின்றி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகள் கீழ் காலாவதியில்லாத அங்கீகாரத்தினையும் பெற வேண்டும்.  மருத்துவ மேலாண்மை விதிகளை கடைபிடிக்க தவறியவர்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகையை வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் மருத்துவக்கழிவுகள் மேலாண்மை விதிகளின்கீழ் அங்கீகாரம் இசைவாணை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தவறினால் மூடுதல் உத்தரவு மற்றும் மின் இணைப்பு துண்டித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: