கிராம ஜோதி யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.15.28 கோடியில் புதிய மின் இணைப்பு

ஈரோடு, பிப். 26:   தீனதயாள் உபாத்யாய கிராம ஜோதி யோஜனா திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் ரூ.15.28 கோடி மதிப்பீட்டில் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் கதிரவன் கூறினார்.  ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவரும், ஈரோடு எம்.பி.யுமான கணேசமூர்த்தி, இணை தலைவரும், திருப்பூர் எம்.பி.யுமான சுப்பராயன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மத்திய அரசின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, சுப்பராயன் ஆகியோர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

 இக்கூட்டத்தில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது:- ஈரோடு மாவட்டத்தில் தனிநபர் இல்ல கழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்வதற்கு ஒவ்வொரு ஊராட்சியிலும் ஆய்வு அட்டைகள் மற்றும் ஆய்வு பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறது. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ் 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை 4 ஆயிரத்து 249 குடியிருப்புகள் ரூ.7.52 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் ஊராட்சிகளில் உள்ள அனைத்து குக்கிராமங்களையும் ஊரக மற்றும் விவசாய சந்தைகள், மண்டி, உயர் மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், கால்நடை மருத்துவமனைகளுடன் தரமான சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.313.60 கோடி வழங்கப்பட்டுள்ளது. தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டடத்தின்கீழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 ஈரோடு மாநகராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தின்கீழ் 20 பூங்காக்கள் ரூ.11.07 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. மாநகர பகுதி முழுமைக்கும் தூய்மையான குடிநீர் வழங்கும் வகையில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் ரூ.484.54 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனிநபர் கழிப்பிட வசதி திட்டத்தின்கீழ் 5 ஆயிரத்து 266 பயனாளிகளுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் கழிப்பிட வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 19 இடங்களில் ரூ.13.58 கோடி மதிப்பீட்டில் நுண்ணுயிர் உரக்கூடங்கள், ரூ.145.33 கோடி மதிப்பீட்டில் குடிநீர் விநியோக பணிகள், ரூ.36.40 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 704 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா மூலம் 4 ஆயிரத்து 512 ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் 4 ஆயிரத்து 710 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

 மேலும் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் ஈரோடு விற்பனை குழுவில் அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தேசிய வேளாண் சந்தை தொடங்கப்பட்டு மஞ்சள், எள், நிலக்கடலை, நெல், மக்காச்சோளம், தேங்காய் உள்ளிட்ட விளை பொருட்கள் பரிவர்த்தனைகள் செய்யப்படுகிறது. தோட்டக்கலைத்துறையின் சார்பில் பரம்பராக்ட் கிரரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.2.88 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது. தீனதயாள் உபாத்யாய கிராம ஜோதி யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.15.28 கோடி மதிப்பீட்டில் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட எஸ்பி. சக்திகணேசன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், புதுடெல்லி மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக திட்ட இயக்குநர் பாலசுப்பிரமணியம் கௌதமன், முதுநிலை புள்ளியியல் அலுவலர் அசோக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள், துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: