×

கருத்து கேட்பு கூட்டம் கண்துடைப்பு உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறையில் பெரும் குழப்பம்

நெல்லை, பிப்.26:  நெல்லை  மாவட்டத்தில் உள்ளாட்சிகள் வார்டு மறுவரையறை செய்ததில் கடும் குழப்பம்  நிலவுவதாக நெல்லையில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள்,  மக்கள் பிரதிநிதிகள் கலெக்டரிடம் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
நெல்லை  மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து  வார்டுகளின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு  கடந்த வாரம், பொதுமக்கள் பார்வைக்காக அந்தந்த உள்ளாட்சியின் அறிவிப்பு  பலகையில் ஒட்டப்பட்டது.இதுதொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்புக்  கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ்  தலைமையில் நடந்தது. முத்துக்கருப்பன் எம்.பி., முருகையா பாண்டியன்  எம்எல்ஏ மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில்  மானூர் யூனியன் முன்னாள் சேர்மன் கல்லூர் வேலாயுதம் பேசுகையில்,   மேலநீலிதநல்லூர் யூனியனில் ஏற்கனவே இருந்த வன்னிக்கோனேந்தல் பிர்க்கா  பகுதிகளை மானூர் யூனியனுடன்  சேர்த்துள்ளனர். இதனால் குருவிகுளம்,  மேலநீலிதநல்லூர், மானூர், பாப்பாக்குடி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள் பிளவுபடுகின்றன. மக்களின் வசதிக்காகத் தான் உள்ளாட்சிகள் பிரிக்கப்பட  வேண்டும். அவ்வாறு பிரிக்காமல் 4 யூனியன்களை பிளவுபடுத்துவது, மக்களுக்கு  எந்த வகையிலும் பயன்படாது. உள்ளாட்சிகள் வார்டு  மறுவரையறை பொதுமக்கள் வசதிக்காக பிரிக்கப்படவில்லை. பல்வேறு இடங்களில்   மக்கள் வசிப்பிடங்களை கருத்தில் கொள்ளாமல், பிரித்துள்ளனர். இவ்வாறு   பிரித்து விட்டு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதால் எந்தப் பலனும்   இல்லை. இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் கண்துடைப்பானது’’ என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம்லீக்  மாவட்ட தலைவர் எல்கேஎஸ் மீரான் பேசுகையில்,  மேலப்பாளையம் மண்டலத்தில் 14  வார்டுகள் இருந்தன. தற்போது ஒவ்வொரு வார்டுகளிலும் 9 ஆயிரம் வாக்காளர்கள்  என்ற நிலையை ஏற்படுத்தி, வார்டுகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர்.  மேலப்பாளையத்திற்கு அப்பால் உள்ள வார்டுகளில் ஒரு வார்டில் 4 ஆயிரத்து 500  வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே வாக்காளர்களை சரி சமமாக பிரிக்க  வேண்டும். வார்டுகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது. அவ்வாறு குறைப்பதால்  சுகாதார பணிகள், அடிப்படை வசதிகள் கடுமையாக பாதிக்கப்படும் ’’ என்றார்.மதிமுக  அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கல்லத்தியான் பேசுகையில், ‘‘பாளையங்கோட்டை மண்டலத்தில் இருந்த திம்மராஜபுரம் பகுதியை உள்ளடக்கிய 11வது  வார்டை தச்சநல்லூர் மண்டலத்தில் இணைத்துள்ளனர். இதனால் இந்தப் பகுதி மக்கள்  11 கி.மீ தூரம் சுற்ற வேண்டியுள்ளது.  எனவே மீண்டும் பாளைங்கோட்டை  மண்டலத்துடன் இணைக்க வேண்டும் என்றார்.பா.ஜ. சார்பில் மாவட்ட  பொதுச் செயலாளர் சுரேஷ் பேசுகையில், ‘‘குலவணிகர்புரம் 28வது வார்டு,  43, 52, 31 என 3 வார்டுகளாக பிளவுபட்டுள்ளது. இதில் 31வது வார்டை  தச்சநல்லூர் மண்டலத்தில் இணைத்துள்ளனர்.

ஏற்கனவே இருந்தவாறு மேலப்பாளையம்  மண்டலத்துடன் தொடருமாறு அனுமதிக்க வேண்டும்.’’ என்றார். இதேபோல் கூட்டத்தில் பங்கேற்ற பலரும் வார்டு மறுவரையில் நிலவும் குளறுபடிகள் குறித்து கருத்து தெரிவித்தனர்.பொதுமக்களின் கருத்துக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு முடிவு செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்தார். கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை  திட்ட இயக்குநர் மந்த்ராச்சலம், நெல்லை மாநகராட்சி கமிஷனர் கண்ணன், உதவி  இயக்குநர் (பஞ்சாயத்து) அருணாசலம், மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் வேலுமயில்,  கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் முத்து இளங்கோவன் (ஊரக வளர்ச்சி),  ராம்லால் (உள்ளாட்சி தேர்தல்),  நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர்கள்  தச்சநல்லூர் ஐயப்பன், நெல்லை வெங்கட்ராமன், மேலப்பாளையம் சுஜித் பிரேம்லா,  லதா, அரசியல் கட்சிகளின் சார்பில் திமுக மாணவரணி ரம்ஜான்அலி, வக்கீல்  சங்கர், பகுஜன்சமாஜ் சார்பில் மாநில  செயலாளர் தேவேந்திரன், மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் மற்றும் பிடிஓக்கள், அரசு அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.

Tags : comment meeting ,government ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...