போலையர்புரத்தில் கட்டி முடித்து 5 ஆண்டுகளாகியும் காட்சி பொருளாக இருக்கும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க கோரிக்கை

சாத்தான்குளம், பிப்.26: சாத்தான்குளம் அருகே போலையர்புரத்தில் கட்டி முடிக்கப்பட்டு  5ஆண்டுகள் ஆகியும் தண்ணீர் ஏற்றாமல் காட்சிப்பொருளாக நிற்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்குள்பட்ட போலையர்புரத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ரூ.9 லட்ச மதிப்பீட்டில் 2015-2016ம் ஆண்டு நிதியாண்டில் விடுபட்டதை சரிக்கட்டும் நிதித்திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்றவே இல்லை.

இதனால் இந்த குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வழங்காமல் காட்சிப் பொருளாக நிற்கிறது. தண்ணீர் நிரப்பப்படாததால் இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழுதடைந்து அதனுடைய குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே சேதமடைய வாய்ப்பு உள்ளது என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே குடிநீர் தொட்டிக்கு உடனடியாக தண்ணீர் இணைப்பு கொடுத்து, அதில் தண்ணீர் ஏற்றி தேவையான தண்ணீர் வழங்கிட வேண்டும்  என போலையர்புரம்  கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: