சாத்தான்குளத்தில் சர்வர் கோளாறு கிசான் கிரடிட் கார்டு விண்ணப்பிக்க முடியாமல் விவசாயிகள் பாதிப்பு தேதி நீட்டிக்க வலியுறுத்தல்

சாத்தான்குளம், பிப்.26: சாத்தான்குளத்தில் கிசான் கிரடிட் கார்ட் வழங்கும் முகாம் இன்றுடன் முடிவடைகிறது. ஆன்லைன் சர்வர் முடங்கியுள்ளதால் பட்டா சிட்டா பெற முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே கிசான் கார்டு பதியும் நாட்களை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.மத்திய அரசு விவசாயிகளுக்கான நகைக்கடனுக்கு வழங்கக்கூடிய சிறப்பு வட்டி சலுகைகளை ரத்து செய்துவிட்டது. விவசாயிகள் தாங்கள் விவசாயத்திற்கு தான் கடன் பெறுகின்றனரா என்பதை உறுதி செய்வதற்காக அனைத்து விவசாயிகளும் கிசான் கார்டு எடுக்க வேண்டும். அதற்கான முகாம்கள் வேளாண்மை அலுவலகத்தில் நடத்தப்பட்டு வந்தது. இதுபோன்ற கிசான் அட்டைகளை பட்டா சிட்டா மூலம் வங்கிகளிலும் சென்று பதிந்து பெற்றுக்கொள்ளலாம் என்றிருந்தது. கிசான் அட்டை இருப்பவர்கள்தான் பிற்காலங்களில் விவசாய கடன்களை பெற இயலும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கிசான் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் 3 நாட்கள் நடக்கிறது.

அந்தந்த ஒன்றியங்களில் உள்ள வேளாண் அலுவலகத்தில் விவசாயிகள் தங்களுக்குரிய பட்டா சிட்டா நகல்களுடன் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அவகாசம் இன்றுடன் (26ம்தேதி) முடிகிறது. சாத்தான்குளம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக சர்வர் முடங்கியுள்ளதால் விவசாயிகள் ஆன்லைனில் பட்டா சிட்டா நகல்களை பதிவிறக்கம் செய்ய முடியாததால் கிசான் அட்டை பெற இயலவில்லை. எனவே கிசான் அட்டை பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டித்து தருவதுடன், ஆன்லைனில் பட்டா சிட்டா பதிவிறக்கம் உடனடியாக நடைபெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: