×

ஒரு மாதத்திற்கு பிறகு இன்று முதல் செயல்பட உள்ள பரனூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும் : வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

சென்னை, பிப். 26: அடிதடி பிரச்னையால் மூடப்பட்ட பரனூர் சுங்கச்சாவடி ஒரு மாதத்துக்குப் பின் இன்று முதல் செயல்பட உள்ளது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 43 இடங்களில், கடந்த 2005 ஏப்ரல் முதல் சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. இங்கு, ஆண்டுக்கு ஒருமுறை 10 சதவீதம் சுங்கவரி உயர்த்தப்பட்டு வாகனங்கள், சரக்கு வாகனங்களுக்கு வரி வசூலிக்கப்படுகிறது. இதனால், அடிக்கடி சுங்க கட்டணம் அடாவடியாக வசூலிப்பதாக உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களும் இடையில் தகராறு ஏற்படுவது வழக்கம். அப்போது, சுங்க கட்டணம் தராத வாகன ஓட்டிகள் மீது, சுங்கச்சாவடியில் ஊழியர்கள் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது, போலீசாரும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக  வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்வதாக கூறப்படுகிறது.
இதையொட்டி, செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் தினமும் 3 லட்சம் வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் மூலம், சாதாரண நாட்களில் 25 லட்சம் முதல் 30 லட்சம் வரையும், தீபாவளி, பொங்கல் உள்பட பல்வேறு பண்டிகை காலங்களில் ₹50 லட்சம் வரையும் வசூலிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி 26ம் தேதி இரவு, பரனூர் சுங்கச்சாவடியில் அரசு பஸ் டிரைவருக்கும், சுங்கச்சாவடி ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை, சுங்கச்சாவடி ஊழியர்கள் சரமாரியாக தாக்கினர். இதையறிந்த மற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள், அங்கேயே பஸ்களை நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பரனூர் சுங்கச்சாவடியை சூறையாடினர். அப்போது, அங்கிருந்த சிசிடிவி கேமரா, கம்ப்யூட்டர், கண்ணாடிகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தில் சுங்கச்சாவடியில் இருந்த 17 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக சுங்கச்சவடி நிர்வாகம் புகார் அளித்தது. இதுதொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார், 4 பேரை கைது செய்தனர். இதைதொடர்ந்து, சுங்கச்சாவடியில் இருந்த அனைத்து பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டதால், கடந்த ஜனவரி 26ம் தேதி முதல் காலவரையின்றி சுங்கச்சாவடி மூடப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கட்டணமின்றி சென்று வந்தனர். வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சென்று வந்தன. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள், கடந்த சில நாட்களுக்கு முன், சம்பவம் நடந்த பரனூர் சுங்கச்சாவடியை ஆய்வு செய்தனர். இதையடுத்து, மீண்டும் சுங்கச்சாவடியில் கண்ணாடி, கேமரா, கம்ப்யூட்டர் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டு, சுங்கச்சாவடி இன்று முதல் செயல்பட உள்ளது. இதனால், அப்குதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னைக்கு செல்லும் நுழைவாயிலில் மீண்டும் இந்த சுங்கச்சாவடியை திறக்கக்கூடாது. மீண்டும் திறந்தால் ஊழியர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையில் மோதல் ஏற்படும். செங்கல்பட்டு பகுதி இல்லாமல் மாமண்டூர் அல்லது மதுராந்தகம் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கவேண்டும். இல்லாவிட்டால் இந்த சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூடவேண்டும். இங்கு பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும் இந்தப் பகுதிகளில் போக்குவரத்து விதிகள் முறையாக கடைபிடிப்பது இல்லை. பெயர் பலகைகளும் இல்லை. ஆனால் சுங்கக் கட்டணம் மட்டும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக சாலை அமைப்பதற்கு செய்த செலவையும் தாண்டி 100 மடங்குக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி முனையில்  அடாவடியாக சுங்க வரி வசூலிக்கப்பட்டுகிறது. இந்த சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூடவேண்டும் என்றனர்.

Tags : Paranur ,motorists ,
× RELATED பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு...