×

தெற்கு மாதவி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் சீரமைக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

பாடாலூர், பிப் 26: ஆலத்தூர் தாலுகா தெற்கு மாதவி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான பராமரிப்பின்றி உள்ள சிவன் கோயிலை சீரமைக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்குமாதவி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோயில் உள்ளது. கடந்த காலங்களில் கிராம பொதுமக்களும், சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் இந்த சிவன் கோயிலில் வழிபாடு நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த கோயில் பராமரிப்பின்றி மரங்கள் முளைத்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இந்த கோயிலில் முருகன், விநாயகர், லிங்கம், சிவன் உள்ளிட்ட சிலைகள் உள்ளன. இந்த கோயில் சிதிலமடைந்த நிலையில் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் உள்ளே சென்று பூஜை செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த கோயிலுக்கு 18 ஏக்கர் மானியம் நிலம் இருப்பதாக பொதுமக்கள் சார்பில் கூறப்படுகிறது. ஆனால் இந்த கோயிலுக்கு மானியம் நிலம் இருந்தும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே இந்த கோயிலின் அனைத்து கட்டிடங்களையும் முறையாக புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். மேலும் இந்த கோயில் நிலங்களை முறையாக குத்தகைக்கு விட்டு அதன் வருவாய் மூலம் நாள்தோறும் கோயிலில் பூஜை நடத்துவதோடு மற்ற இதர சிவன் கோயில் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : village ,Dakshina Madhavi ,Shiva ,devotees ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...