×

வாராப்பூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் பிரதமரின் சமான் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெற புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,24,704 விவசாயிகள் பதிவு

புதுக்கோட்டை, பிப்.26: பிரதமரின் சமான் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெற புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,24,704 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர் என கலெக்டர் கூறினார்.புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்குதல் தொடர்பாக வங்கியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.தொடர்ந்து கலெக்டர் பேசுகையில், கிசான் கடன் அட்டையின் மூலம் விவசாயிகள் வங்கிகளில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று வந்தனர். தற்போது இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் கடன் பெறும் உச்ச வரம்பு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருவதுடன், 7 சதவீத குறைந்த வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் கடன் பெற்ற விவசாயிகள் தாங்கள் பெற்ற கடனை முறையாக திருப்பி செலுத்தும்போது கடன் முடிந்தவுடன் 3 சதவீத வட்டி மீண்டும் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் திருப்பி செலுத்தப்படுகிறது. பாரத பிரதமரின் சமான் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெற புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 24 ஆயிரத்து 704 விவசாயிகள் பதிவு செய்து உள்ளனர்.

80 ஆயிரத்து 938 விவசாயிகளுக்கு கிசான் கார்டு மற்றும் கடன் அட்டை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 43 ஆயிரத்து 766 விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்க வேண்டி உள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் வகையில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை வங்கிகளின் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு 17 ஆயிரத்து 341 விவசாயிகளிடம் இருந்து படிவங்கள் பெறப்பட்டு, கிசான் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதேபோல எஞ்சிய 26 ஆயிரத்து 425 விவசாயிகளுக்கும் கடன் அட்டை வழங்கும் வகையில் 2 நாட்களில் கிராமப்புறங்களில் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்படுகிறது என்றார். கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரமேஷ், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பெரியசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,district ,Special Grama Sabha ,
× RELATED மணிப்பூரில் காங்கிரஸ் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு..!!