மாசிமக தீர்த்தவாரிக்காக கும்பகோணம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுமா?

கும்பகோணம், பிப். 26: மாசிமக தீர்த்தவாரி மார்ச் 8ம் தேதி நடப்பதையொட்டி கும்பகோணம் காவிரி ஆற்றில் தண்ணீர் விட வேண்டும், பொற்றாமரை குளத்தில் தண்ணீர் நிரப்ப வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் வரும் மாசி மகத்தன்று கும்பகோணத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் விழா கொண்டாடப்படும். இந்த விழாவையொட்டி 12 சிவன் கோயில், 5 பெருமாள் கோயில்களில் கொடியேற்றம், ஓலைச்சப்பரம், தேரோட்டம், முக்கிய விழாவான தீர்த்தவாரி நடைபெறும்.

புகழ்பெற்ற மாசிமக தீர்த்தவாரி விழா மார்ச் 8ம் தேதி காலை 10.15 முதல் 11.45 மணி வரை நடக்கிறது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமக குளம், பொற்றாமரை குளங்களில் புனித நீராடி விட்டு பின்னர் காவிரி ஆற்றில் நீராடுவர். இதைதொடர்ந்து சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் வழிபாடு செய்வர். இத்தகைய சிறப்பு வாய்ந்த விழாவன்று பக்தர்கள் புனித நீராடுவதால் மகாமக குளம், பொற்றாமரை குளங்களில் தண்ணீர் நிரப்பியுள்ளனர்.

தற்போது பொற்றாமரை குளத்தில் உள்ள தண்ணீரில் பாசிகள் படர்ந்தும், துர்நாற்றமும் வீசி வருகிறது.

இதேபோல் காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக இருப்பதால் பக்தர்கள் காவிரியாற்றில் நீராடுவதற்கு சுகாதாரமான தண்ணீர் இல்லாமல் உள்ளது. ஆற்றில் ஓடும் குறைந்த அளவிலான தண்ணீரும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இந்த தண்ணீரில் பக்தர்கள் நீராடினால் பல்வேறு தோல் நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே காவிரியாற்றில் மாசி மகத்தையொட்டி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும். மேலும் பொற்றாமரை குளத்தில் தண்ணீர் நிரப்ப வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ரமேஷ் கூறுகையில், மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமக குளம், பொற்றாமரை குளம் மற்றும் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடுவர். தற்போது காவிரி ஆற்றில் குறைந்தளவே தண்ணீர் உள்ளது. அந்த தண்ணீரும் அசுத்தமாக உள்ளது. எனவே மாசிமக விழாவையொட்டி பொற்றாமரை குளத்தில் தண்ணீர் நிரப்ப வேண்டும். மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: