×

தஞ்சை புதிய பேருந்து நிலையத்துக்குள் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க கூடாது

தஞ்சை, பிப். 26: தஞ்சை புதிய பேருந்து நிலையத்துக்குள் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி வழங்கக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை புதிய பேருந்து நிலைய நுழைவுவாயில் மிக அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதேபோல் பேருந்து நிலையத்தின் எதிர்புறத்தில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தற்போது பேருந்து நிலையத்தின் உள்ளேயே மற்றொரு டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையறிந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய பேருந்து நிலையத்தில் நகர பேருந்துகள் நிற்கும் இடத்துக்கு நேர் எதிரே புதிதாக மாநகராட்சி மூலம் கட்டப்பட்ட வணிக கடைகளின் பின்புறம் டாஸ்மாக் கடை திறப்பதற்காக பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. வணிக கடைகளுக்காக கட்டப்பட்ட கட்டிடத்தையொட்டி பெரிய ஷெட் போடப்பட்டு அதில் பார் வசதியுடன் கடை செயல்படவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன. தற்போது கடை துவங்குவதற்கான அனுமதிக்கு காத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, பேருந்து நிலையத்தின் உள்ளேயே டாஸ்மாக் கடை திறப்பது சமூகம் எந்தளவுக்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு அடையாளமாக உள்ளது. ஏற்கனவே இளம்தலைமுறையினர் மதுவால் வாழ்க்கையை இழந்து, குடும்பத்தை இழந்து வருகின்றனர். தற்போது பள்ளி மாணவிகள் முதல் மூதாட்டி வரை மது அருந்தும் பழக்கத்துக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என அறிவித்த தமிழக அரசு மேலும் மேலும் கடைகளை திறப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

பேருந்து நிலையத்தின் உள்ளே ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடையை திறப்பது பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும். குறிப்பாக இரவு நேரங்களில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும். மேலும் டாஸ்மாக் கடை திறக்கப்படும் கடையின் பக்கத்தில் செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்கள் பாதிக்கப்படும். எனவே பேருந்து நிலையத்தின் உள்ளே திறக்கப்படும் டாஸ்மாக் கடையை உடனடியாக நிறுத்த வேண்டும். அங்கு டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என்றனர்.

Tags : task force ,bus stand ,Tanjore ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை