×

துறையூர் நகராட்சி 22வது வார்டு பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

துறையூர், பிப்.26: துறையூர் நகராட்சி 22வது வார்டு பகுதியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துறையூர் நகராட்சியில் 22வது வார்டுக்கு உட்பட்ட பகுதி காந்திநகர். இப்பகுதியில் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் இப் பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக முறையாக இப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பழைய குழாய்களை அகற்றிவிட்டு புதிய குழாய்கள் பதிப்பதற்கு பறித்து வைக்கப்பட்ட குழிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்படாமல் உள்ளதால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் நடந்து செல்வது கூட மிகவும் சிரமமாக இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

வயது முதிர்ந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ போன்ற வாகனங்கள் உள்ளே வரமுடியாத அளவிற்கு பாதை மிகவும் மோசமாக குண்டும், குழியுமான நிலையில் உள்ளது என குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் துறையூர்-திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் துறையூரில் இருந்து திருச்சி பெரம்பலூர் மற்றும் ஆத்தூர் செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 10 தினங்களில் சாலை சீரமைத்து, குடிநீர் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Tags : Puraiyur Municipality Public Road Strike ,Ward ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி