×

கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடக்கம்

பெரியகுளம், பிப். 26: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் இன்று தொடங்குகிறது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்புத்திருப்பலி, ஆராதனை நடைபெறும். யேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட 3ம் நாள் உயிர்த்தெழும் தினத்தை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இந்த விழாவிற்கு முந்தைய 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக அனுசரிக்கின்றனர். முதல் நாள் சாம்பல் புதன் கிழமையாக அனுசரிக்கப்படுகிறது. தவக்கால நாட்களில் கிறிஸ்தவர்கள் மீன், இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளை தவிர்க்கின்றனர். வீடுகளில் ஆடம்பர நிகழ்ச்சிகள், கொண்டாட்ங்கள், திருமண நிகழ்வுகளையும் தவிர்க்கின்றனர்.

ஏசுவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூறும்வகையில், வெள்ளிக்கிழமை தோறும் கத்தோலிக்க தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறும். மேலும், ஆலயங்களிலிருந்து பங்கு மக்கள் குழுவாக சேர்ந்து வேறு ஆலயங்களுக்கு திருயாத்திரை பயணம் செய்வர். ஏழைகளுகக்கு உணவு அளிப்பது, தர்ம காரியங்கள் செய்வது உள்ளிட்ட நற்செயல்களில் ஈடுபடுவர். இந்த ஆண்டு ஈஸ்டர் பெருவிழா ஏப்.12ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே அதற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக அனுசரிக்கப்படும். இந்த வழிபாட்டின்போது குருத்தோலை ஞாயிறன்று வழங்கப்பட்ட குருத்தோலைகளை எரித்து தயாரிக்கப்பட்ட சாம்பலை பாதிரியார் மக்கள் நெற்றியில் சிலுவை அடையாளமிட்டு, ‘மனிதனே நீ மண்ணாக இருந்தாய் மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே’ என்பார். இந்த ஆண்டு தவக்காலம் பிப்.26ல் தொடங்கி ஏப்.12ம் தேதி ஈஸ்டர் பண்டிகையுடன் முடிவடைகிறது.

Tags :
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா