×

தேவதானப்பட்டியில் உரிமம் இல்லாமல் ஆட்டோ ஓட்டுபவர்கள் அதிகரிப்பு போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

தேவதானப்பட்டி, பிப். 26: தேவதானப்பட்டியில் உரிமம் இல்லாமலும், உரிய வயது இல்லாமலும், முறையான பயிற்சி இல்லாமலும் ஆட்டோ ஓட்டுபவர்களால், விபத்து அதிகரித்து வருகிறது. இவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பகுதியில் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆட்டோக்களை ஓட்டுபவர்களில் சிலர் முறையான உரிமம் பெறுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இவர்கள் தொடர்ந்து விபத்துகளை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டுகின்றனர். பொதுவாக ஆட்டோவை ஓட்டுபவர்கள் காக்கி சீருடை அணிந்திருக்க வேண்டும். அந்த சீருடையில் பெயர் பொறித்த அட்டை, வண்டியில் போலீஸ் எண் ஆகிய குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த விதிமுறையை யாரும் பின்பன்றுவதில்லை. ஒரு சில ஆண்டுகள் மட்டுமே அமலில் இருந்த இந்த விதிமுறை, பின்னர் காற்றில் பறந்தது.

இந்நிலையில் தேவதானப்பட்டியில் சொந்தமாக ஆட்டோ வைத்திருப்போர், குறைந்த சம்பளத்திற்கு டிரைவர்களை வேலைக்கு வைத்து ஆட்டோக்களை ஓட்டுகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் உரிமம் இல்லாமலும், 18 வயது பூர்த்தியடையாதவர்களாகவும் உள்ளனர். முறையான டிரைவிங் பயிற்சியும், அனுபவமும் இல்லாததால், தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. ஒரு சில டிரைவர்கள் மட்டுமே, விதிமுறைகளை மீறாமல் ஆட்டோக்களை ஓட்டுகின்றனர். பெரும்பாலோர் விதிமுறை மீறி ஆட்டோக்களை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். எனவே, தேவதானப்பட்டியில் உரிமம் இல்லாமலும், உரிய வயது பூர்த்தியடையாமலும், ஆட்டோக்களை ஓட்டுவோர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : auto drivers ,
× RELATED உதகையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கைது..!!