×

பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவில் பால்குட விழாவிற்கு உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் பக்தர்கள் வலியுறுத்தல்

காரைக்குடி, பிப்.26: காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் மாசி பங்குனி பால்குட விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் தமிழக அளவில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் மாசி, பங்குனி விழா 30 நாட்களுக்கு மேல் நடைபெறும். தமிழகம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த ஆண்டுக்கான விழா வரும் 10ம் தேதி காலை 5.45க்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதனை தொடர்ந்து காலை 6.28 மணி முதல் 6.57க்குள் காப்புக்கட்டுதல் நடக்கிறது. 17ம் தேதி இரவு 7 மணிக்கு கோவில் கரகம், மது மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.

18ம் தேதி காலை 9.30க்கு பால்குடம், காவடி, பூக்குழி, மாலை 4 மணிக்கு கரகம், மது, முளைப்பாரி புறப்பாடு, இரவு 8.20 மணிக்கு காப்பு பெருக்குதல். 19ம் தேதி இரவு 9 மணிக்கு அம்மன் திருவீதி உலா, 20ம் தேதி மாலை 4 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது. வரும் 10ம் தேதி துவங்கும் விழா ஏப்.22ம் தேதி வரை நடக்கிறது. 18ம் தேதி நடக்கும் பால் குட விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சமூகஆர்வலர்கள் பழனியப்பன், மெய்யர் கூறுகையில், மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுக்கும் விழா வரும் 18ம் தேதி நடக்கவுள்ளது. அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை வழங்க வேண்டும் என்றனர்.

Tags : Devotees ,holidays ,ceremony ,Palguda ,Muthumariyamman ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...