×

கொடைக்கானல் மேல் கிளாவரையில் காலம்காலமாக தொடரும் கலங்கல் குடிநீர் நிறம் மாற்றும் மரங்களை அழிக்க கோரிக்கை

கொடைக்கானல், பிப். 26: கொடைக்கானல் மேல் கிளாவரையில் குங்குலியம், பைன், சவுக்கு மரங்களால் குடிநீர் நிறம் மாறி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் மேல்மலையில் மேல் கிளாவரை, கீழ் கிளாவரை என தனித்தனியே கிராமங்கள் உள்ளது. இதில் கீழ் கிளாவரைக்கு வரும் செருப்படை ஓடை தண்ணீர் நன்றாக உள்ளது. ஆனால் மேல் கிளாவரைக்கு வரும் தொலுக்கம்பட்டி ஓடை தண்ணீர் சகதியில் இருந்து வடிகட்டியது போல் அடர் மஞ்சள் மற்றும் அடர் சிகப்பு நிறத்தில் மிகவும் கடினத்தன்மையோடு உள்ளது. இந்த தண்ணீரை தான் கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் வசிக்கும் சுமார் 200 குடும்பத்தினர் பருகி வருகின்றனர்.

மேல் கிளாவரைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள தொலுக்கம்பட்டி ஓடை கரையில் நீராதாரத்தை நிறம் மாற்றும் தன்மை கொண்ட குங்குலியம், சவுக்கு, பைன் மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மேலும் 100க்கும் மேற்பட்ட மரங்கள் ஓடை கரையிலும், குளத்தினிலும் விழுந்துள்ளது. இதனாலே நீராதாரம் மாசுபட்டு நிறம் மாறி கடினத்தன்மையோடு வருவதாக கூறப்படுகிறது. மேலும் மண் தன்மைக்கு ஒவ்வாத இந்த வகை மரங்களால் நீராதாரங்கள் கொஞ்சம், கொஞ்சமாக நஞ்சாகி வருவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.பைன், குங்குலியம், சவுக்கு மரங்கள் வனவிலங்குகளின் தேவைக்கு எந்த ஒரு உணவு சங்கிலியோ கொடுக்காமல் ஒருவகை தாவரமாக வீரியமாக வளர்ந்து புல்வெளிச்சூழல், சோலைக்காடுகளை அழித்து வருகிறது. இதுபோதாதென்று தற்போது மனிதன் உள்பட பல உயிர்களின் அடிப்படை ஆதராமான குடிநீரையும் மாசடைய செய்து வருவதை அறிந்தும், அறியாமலும் வனத்துறை உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

எனவே மேல் கிளாவரைக்கு ஆதராமான தொலுக்கம்பட்டி ஓடையை சுற்றியுள்ள மரங்களை முற்றிலும் அகற்றி, அதில் தெளிவுத்தொட்டி அமைத்து, சுகாதாரமான சூழலை உருவாக்க வேண்டும். அப்போதுதான் ஓடை காப்பாற்றப்பட்டு சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை ஏற்படும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் கண்ணனிடம் கேட்டபோது கூறியதாவது, ‘மேல் கிளாவரை பகுதியில் குடிநீர் குறித்த புகார் எழுந்தவுடன் உடனே ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து புலவச்சி ஆற்று பகுதியில் இருந்து இரண்டரை கிமீ தொலைவிற்கு பெரிய பிளாஸ்டிக் பைப்புகள் மூலம் குடிநீர் கொண்டு வந்து மேல் கிளாவரை அருகிலுள்ள கிணற்றில் இந்த தண்ணீர் சேமிக்கப்படும். அதன்பின் அங்கிருந்து மோட்டார் மூலம் பம்ப் செய்யபட்டு இப்பகுதிக்கு சுத்தமான குடிநீர் தருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் விரைந்து முடிந்தவுடன் நல்ல குடிநீர் வழங்கப்படும்’ என்றார்.

Tags : Kodaikanal Upper Klavarai ,
× RELATED கொடைக்கானல் மேல் கிளாவரையில்...