×

மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

கடலூர், பிப். 26: கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளித்தனர். இதில் மொத்தம் 392 மனுக்கள் வரப்பெற்றன. இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 15 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் உதவிதொகைக்கான ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 8 நபர்களுக்கு தலா ரூ.3,573 மதிப்பில் மொத்தம் ரூ.28,584 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 நபர்களுக்கு தலா ரூ.75,000 மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் வழங்கினார்.

மேலும் கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 12 வட்டார கல்வி அலுவலகங்களை உள்ளடக்கிய 858 பள்ளிகளில் பயிலும் 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயில்வோர்களுக்கு ரூ.500 வீதம் 6,129 மாணவிகளுக்கு ரூ.30.65 லட்சமும், 6ம் வகுப்பு பயிலும் 1,318 மாணவிகளுக்கு ரூ.13.18 லட்சமும் என மொத்தம் 7,557 மாணவிகளுக்கு ரூ.43.93 லட்சம் மதிப்பீட்டில் ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்காமல் மாயமாகினர். இவர்களுக்கு பதிலாக கீழ் நிலையில் உள்ள அலுவலர்கள் பங்கேற்றிருந்தனர். இதனால் பொதுமக்களுக்கு குறைதீர் நாள் கூட்டத்தில் முறையான பதில் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. மேலும் ஒரு மாதத்திற்கு மேல் நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் நடவடிக்கை என்ன என்பது கேள்விக்குறியானது. இதையடுத்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் கிருபாகரன் இதுபோன்று அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டிய கூட்டத்தில் பங்கேற்காமல் உள்ளவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களுக்கான கூட்டம் என்பதால் கண்டிப்பாக துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. குறை தீர்வு நாள் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது