கள்ளக்குறிச்சியில் பரபரப்பு குற்ற சம்பவங்களை தடுக்க நகரம் முழுவதும் 183 போலீசார் திடீர் சோதனை

கள்ளக்குறிச்சி, பிப். 26: கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 183 போலீசார் நேற்று திடீரென சோதனை செய்ததால் கள்ளக்குறிச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி எஸ்பி ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில், டிஎஸ்பிக்கள் கள்ளக்குறிச்சி ராமநாதன், உளுந்தூர்பேட்டை விஜிகுமார்,  இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், குமார், சுமதி, ரேவதி, பத்மா, மகேஸ்வரி, பார்த்திபன், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள், உள்ளூர் போலீசார் 79 பேர், வெளியூர் போலீசார்கள் 30 பேர், ஆயுதபடை காவலர்கள் 20 பேர், சிறப்பு காவல்படை காவலர்கள் 30 பேர் என மொத்தம் 183 போலீசார் நேற்று கள்ளக்குறிச்சி பஸ் நிலைய வளாகத்திற்கு திடீரென வரவழைக்கப்பட்டனர். அப்போது எஸ்பி ஜெயச்சந்திரன் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

அதன்படி, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 14 குழுவாக பிரிந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். அதில் குறிப்பாக லாட்டரி விற்பனை செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கண்காணித்து சோதனை செய்ய வேண்டும்.

கள்ளக்குறிச்சி முக்கிய சாலை பகுதியான கச்சிராயபாளையம் சாலை, கோட்டைமேடு, ஏமப்பேர், ஏகேடி பள்ளி ஆகிய பகுதியில் வாகன சோதனை செய்ய வேண்டும். சூதாட்டம், கள்ளச்சாராயம், கஞ்சா, புகையிலை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தங்கும் விடுதியில் சந்தேகப்படும்படியான நபர் யாரேனும் தங்கி உள்ளார்களா என ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு தங்கியுள்ள வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் விவரங்களை சேகரித்து அதில் சந்தேகப்படும்படியாக யாரேனும் தங்கியுள்ளது தெரியவந்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்பி ஜெயச்சந்திரன் போலீசாருக்கு அதிரடி உத்தரவிட்டார்.இதையடுத்து போலீசார் 14 குழுவாக சென்று கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி பகுதியில் ஒரே நேரத்தில் 183 போலீசார் வணிக நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தியது மட்டுமின்றி, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

Related Stories: