சப்-கலெக்டர் அலுவலகத்தில் கவர்னர் ஆய்வு

வில்லியனூர், பிப். 26: வில்லியனூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கவர்னர் கிரண்பேடி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து ஆவணங்களையும் கணினிமயமாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று காலை வில்லியனூரில் உள்ள சப்-கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை அலுவலகத்தில் கவர்னர் கிரண்பேடி ஆய்வு நடத்தினார். அப்போது அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் வருகை பதிவு, சான்றிதழ் வாங்க வழங்கும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அப்போது ஒரு நாளைக்கு எவ்வளவு பேர் சான்றிதழுக்காக விண்ணப்பிக்கின்றனர் என்றும், அனைவரின் பெயர், முகவரி, விண்ணப்பிக்கும் நோக்கம் குறித்து பதிவு செய்யப்படுகிறதா என்றும் அவர் ஆய்வு செய்தார்.மேலும் அலுவலகத்தின் வரவேற்பறையில் ஒரு கணினி வைத்து வருகை பதிவு உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களில் பாதி பேப்பர்களாகவும், மீதி கணினியிலும் உள்ளது. இவற்றை முழுமையாக கணினிமயமாக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்து மாதம் ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும் என்றும், அடுத்த வாரம் திரும்ப ஆய்வுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது சப்-கலெக்டர்கள் சஷ்வப் சவுரப், சுதாகர், தாசில்தார்கள் செந்தில்குமரன், மகாதேவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.இது குறித்து கவர்னர் கிரண்பேடி வாட்ஸ்அப்பில் கூறியிருப்பதாவது: நில அபகரிப்புகள் வழக்குகள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தின் ஒரு பகுதி. அவை தீர்க்கப்பட வேண்டும். இதில் அதிகாரங்கள் பயன்படுத்தவேண்டிய பொறுப்புண்டு. நேரடி கள ஆய்வு என்பது  நீதியை உறுதி செய்வதற்காகதான்.சில சந்தர்ப்பங்களில் வெளிநாட்டிலுள்ள மூத்த குடிமக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. வருவாய்த்துறை அதிகாரிகள் மணல் கடத்தலை தடுக்க போலீசார் உதவியை பெற வேண்டும். இரு தரப்பும் இணைந்து கூட்டு சோதனைக்கு செல்வது அவசியம். இங்கு மனு பெறும் முறையும், வரவேற்பு முறையும் மாற வேண்டும். நில ஆவணங்கள், நில பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதில் அதிக ஈடுபாட்டை நில ஆர்ஜித துறை காட்ட வேண்டும்.

அடுத்த ஆய்வை வரும் செவ்வாயன்று செய்யவுள்ளேன். இதுபோல் ஆட்சியர் அலுவலகத்துக்கும் சென்று ஆய்வு செய்து இந்த உத்தரவை பிறப்பித்தோம். மார்ச் மாதத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்ய உள்ளோம்.அதிகாரிகள் தொழில்நுட்பத்தின் கருவிகளை சிறப்பாக பயன்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நில அபகரிப்பு பற்றி புகார்களின் தற்போதைய நிலை தொடர்பான வெளிப்படைத்தன்மைக்காக வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து பதிவிட வேண்டும். ஒவ்வொரு புகாரும் கணக்கில் வைக்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் அஞ்சாமல் சொந்த தகுதிகளின் அடிப்படையில் கையாள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: