×

இலவச அரிசி வழங்க கோரி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்

புதுச்சேரி, பிப். 26: இலவச அரிசி வழங்க கோரி வரும் 5ம் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அஜிஸ் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். மத்திய குழு உறுப்பினர் சுதா, மாநில குழு உறுப்பினர் பெருமாள், பிரதேச குழு உறுப்பினர் முருகன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், அபிஷேகம், ராமமூர்த்தி, திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ, துணை அமைப்பாளர் கென்னடி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கண்ணபிரான், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ பொழிலன், லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலசுப்பிரமணியன், மோதிலால், திராவிடர் கழகம் சிவ வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுவை பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும், இலவச பேருந்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக வரும் 28ம் தேதி பல்கலைக்கழக வளாகம் முன் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பட்டம் நடத்தப்படும்.இலவச அரிசி தொடர்ந்து வழங்க கோரி மார்ச் 2, 3ம் தேதிகளில் புதுச்சேரி முழுவதும் பிரசாரம் செய்து கையெழுத்து இயக்கம் நடத்தி ஜனாதிபதிக்கு அனுப்புவது, மார்ச் 5ம் தேதி பெண்கள் மற்றும் அரிசி திட்ட பயனாளிகளை ஒன்று திரட்டி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.




Tags : Siege ,Governor ,House ,
× RELATED மக்கள் தொடர்பே இல்லாதா நீங்கள்...