நீரத்தநல்லூர் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைத்திருந்த ரசாயன பவுடர் காற்றில் பறந்ததால் மாணவர்கள் பாதிப்பு

கும்பகோணம், பிப். 25: கும்பகோணம் அடுத்த நீரத்தநல்லூர் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைத்திருந்த ரசாயன பவுடர் பறந்ததால் ஏற்பட்ட துர்நாற்றத்தால் மாணவர்கள், மக்கள் அவதிப்பட்டனர். இதுபோல் அலுவலர்கள் மெத்தனமாக இருக்ககூடாது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நீரத்தநல்லூர் கிராமத்தில் திறந்தவெளி நெல் மூட்டை சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் பகுதிகளில் அறுவடை செய்த நெல் மூட்டைகள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது.பின்னர் மாவட்ட அதிகாரிகள் உத்தரவின்பேரில் சில நாட்களுக்கு வெளிமாவட்டங்களுக்கு அரவை பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. நெல்கள் அரிசியான பிறகு பொது விநியோகத்திற்கு வழங்கப்படுகிறது. இதற்காக நெல் மூட்டைகளை அடுக்கிய பின் மழைநீர் புகாமல் இருப்பதற்காகவும், பனியால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் படுதாவை போட்டு மூடி வைப்பார்கள்.

இதேபோல் மூடி வைத்துள்ள நெல் மூட்டைகள் எலி, விஷ ஜந்துக்கள், அந்து பூச்சிகளால் வீணாகி விடக்கூடாது என்பதற்காக ரசாயன பவுடரை தூவி வைப்பர். சில நாட்களுக்கு பிறகு ரசாயன பவுடரின் தரம் குறைந்ததும் மீண்டும் தூவி வைப்பர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நெல் மூட்டை சேமிப்பு கிடங்கில் எலிகள், பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்காக ரசாயன பவுடரை தெளித்தனர். பின்னர் மீதமான பவுடரை சேமிப்பு கிடங்கின் வெளியில் வைத்து வி்ட்டு சென்று விட்டனர். நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கின் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று காலை முதல் காற்று பலமாக வீசியதால் ரசாயன பவுடர் முழுவதும் பறந்தது. அப்போது ரசாயன பவுடரில் இருந்து வந்த துர்நாற்றத்தால் மூச்சி விட முடியாமல் அவதிப்பட்டனர். தொடர்ந்து இதே நிலை நீடித்ததால் பள்ளி வகுப்பறையில் உள்ள அனைத்து கதவுகளும் தாழிடப்பட்டது. ஆனாலும் காற்றில் கலந்த ரசாயன பவுடரால் நீரத்தநல்லூர் கிராமம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். எனவே நீரத்தநல்லூர் கிராமத்தில் ரசாயன பவுடரால் பாதிக்கப்படும் நிலையில் உள்ள பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், மக்களுக்கு உரிய சிகிச்சையளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர் கூறுகையில், சேமிப்பு கிடங்கில் ரசாயன பவுடர் தூவும்போது எங்களிடம் சொல்லி விடுவர். வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் தூவி வந்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், ரசாயன பவுடரை துாவினர். அதில் மீதமுள்ள பவுடரை வெளியில் வைத்து விட்டு சென்று விட்டனர்.நேற்று காலை காற்றில் ரசாயன பவுடர் பறந்து பரவியது. இதனால் பள்ளிக்கூடம், கிராமம் முழுவதும் ரசாயன பவுடரால் துர்நாற்றம் அடித்தது. இந்த நாற்றத்தால் வயிற்றை கலக்குவது போலவும், தொண்டைக்குள் கசப்பும் தன்மை, மூச்சை இழுத்தால் மயக்கம் வருவது போல் இருந்ததால் பள்ளி ஜன்னல் கதவுகளை தாழிட்டோம். எனவே இனி வரும் நாட்களில் பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் ரசாயன பவுடரை தூவ வேண்டும். ரசாயன பவுடரை வௌியில் வைக்காமல் பாதுகாக்க வேண்டும் என்றார்.

Related Stories: