தினக்கூலியாக ரூ.150 முதல் ரூ.250 வரையே வழங்கப்படுகிறது கலெக்டரின் உத்தரவை அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்

தஞ்சை, பிப். 25: கலெக்டரின் உத்தரவை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி தினக்கூலியாக ரூ.150, ரூ.200, ரூ.250 வரையே வழங்கப்படுகிறது. எனவே கூலியை உயர்த்தி வழங்க வேண்டுமென தஞ்சையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் தூய்மை காவலர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்தார். கூட்டத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்.தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை சங்க பொது செயலாளர் ஜேசுதாஸ், மாவட்ட சிஐடியூ துணை செயலாளர் அன்பு மற்றும் ராமலிங்கம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் வந்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறை, திருபுவனம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், வேப்பத்தூர் ஆகிய பேரூராட்சிகளிலும், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய நகராட்சிகளிலும் தூய்மை காவலர் துப்புரவு பணியாளராக நூற்றுக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மிக சொற்ப கூலியாக ரூ.150, ரூ.200, ரூ.250 மட்டுமே வழங்கப்படுகிறது.

கலெக்டர் உத்தரவின்படி குறைந்தபட்சம் தினக்கூலியாக ரூ.385 வழங்க வேண்டும். ஆனால் மேற்கண்ட பேரூராட்சி நிர்வாகங்கள் இந்த உத்தரவை அமல்படுத்தாமல் அலட்சியம் செய்து வருகின்றனர். இதை வலியுறுத்தி போராட்டம் நடத்தியும் குறைந்தபட்ச கூலியான ரூ.385 தர மறுத்து வருகின்றனர். எனவே கலெக்டர் மேற்குறிப்பிட்ட பேரூராட்சி நிர்வாகங்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.ஒரத்தநாடு நடுபள்ளத்தூர் நெய்வேலி கருப்பையா மகன் கலைமாறன் அளித்த மனு: எங்கள் கிராமத்தில் 30 குடும்பங்களுக்கு பாத்தியப்பட்ட குலதெய்வம் சன்னாசி கோயில். இக்கோயிலில் பல தலைமுறையாக பூசாரியாக பூஜைகள் உள்ளிட்ட அனைத்துவித விழாக்களையும் நடத்தி வருகிறோம். ஆனால் கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் உள்ள 10 குடும்பத்தினர் இந்த கோயில் உங்களுக்கு உரிமையில்லை என தகராறு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ஒரத்தநாடு வருவாய் தாசில்தாரிடம் புகார் செய்தேன். இதையடுத்து தாசில்தார் நேரில் வந்து ஆய்வு செய்து இந்த இடம் நத்தம் புறம்போக்கு என்றும் ஆண்டு அனுபவித்து கொள்ளலாம். ஆனால் உரிமை கோர முடியாது என சொல்லிவிட்டு சென்றனர். ஆனால் கடந்த 21ம் தேதி இரவோடு இரவாக கோயில் மேற்கண்ட 10 குடும்பத்தினர் நாங்கள் கோயிலுக்கு வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி எங்களை கோயில் உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர். இக்கோயில் எங்களது குலதெய்வம். இக்கோயிலில் வழிப்படவும், பூஜை செய்யவும் எங்களுக்கு அனுமதி மறுப்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது. எனவே அங்கு ஏற்பட்ட சமூக பதற்றத்தை தடுத்து கோயிலில் பூஜைகள் செய்ய எங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: