கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களுடன் திரண்ட மக்கள்

திருச்சி, பிப்.25: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மண்ணச்சநல்லூர் வட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான பெண்கள் திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:மண்ணச்சநல்லூர் நம்பர்.1 டோல்கேட் சேலம் ரோட்டில் திறக்கப்பட்டுள்ள அரசு மதுபான கடை மதுராபுரிநகர், ஓம் சக்தி நகர், குட்டி மணி நகர், விஎன் நகர், திருவள்ளுவர் அவென்யூ, ஜெஜெ நகர், மருத்துவமனை, பஸ் நிறுத்தம், பள்ளி ஆகிய பகுதிகளின் மத்தியில் அமைந்துள்ளது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்த மதுபானக் கடையால் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மதுபானக் கடையை அகற்ற வேண்டும். தவிர நம்பர்.1 டோல்கேட் சேலம் ரோட்டில் ஆடு, கோழி, மீன் காய்கறி கடைகள் உள்ளன. இவற்றுக்கு தனி இடம் ஒதுக்கி தந்து மார்க்கெட் அமைத்து தரவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.ஜனநாயக வாலிபர் சங்க மாநகர மாவட்ட செயலாளர் லெனின் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவெறும்பூர் என ஊர் பெயராக அழைக்க எறும்பீஸ்வரர் மலைக்கோயிலின் சிறப்பே ஆகும். சோழ மன்னர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த மலைக்கோயில் பராமரிப்பு ஏதுமின்றி உள்ளது. பிரதோஷம் மற்றும் வாரம் தோறும் வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறைகள், ஓய்வறைகள், இருக்கைகள், காலணி, வாகன பாதுகாப்பிடம் அமைத்து தரவேண்டும். கோயில் தெப்பக்குளம் பராமரிக்காமல் துர்நாற்றம் வீசுகிறது. சிறுவர் பூங்கா, தெப்பக்குளத்தில் படகு சவாரி உள்ளிட்ட பொதுழு போக்கு அம்சங்களுடன் நவீனப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

லால்குடி குமுளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அலுவலகப் பணியாளர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் 2008ம் ஆண்டு லால்குடி குமுளூரில் உறுப்புக்கல்லூரி துவங்கப்பட்டது. இக்கல்லூரியில் 12 அலுவலகப் பணியாளர்கள் 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். தற்போது இக்கல்லூரி அரசுக் கல்லூரியாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் சேர்ந்த 12 அலுவலக பணியாளர்களின் நிலை குறித்து எந்தவித அறிவிப்பம் இல்லை. கல்லூரியை நம்பி வேலைக்கு வந்தோம். தற்போது அனைவரும் 40 முதல் 45 வயது கடந்த நிலையில் உள்ளோம். வேறு எங்கும் பணிக்கும் செல்ல முடியாது. எனவே எங்களை தொகுப்பூதியத்திலிருந்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா நிர்வாகி சாகுல்அமீது அளித்த மனுவில், ‘பழைய பால் பண்ணை பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்த வேண்டும். இது தொடர்பாக பல முறை மனு அளித்தும் பயனில்லை. பஸ் நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்’ என குறிப்பிட்டுள்ளார். திருவெறும்பூர் துவாக்குடி, ராவுத்ரா தெருவை சேர்ந்த சந்திரசேகர் தான் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்கக்கோரி 7வது முறையாக மனு அளித்ததாகவும், இந்த முறை பட்டா வழங்காவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

Related Stories: