×

இளைஞர்களுக்கு உடல் தகுதி தேர்வு மயிலாடுதுறையில் 120 ஆண்டு பழமையான பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி விரைவில் துவக்கம்

மயிலாடுதுறை, பிப். 25: மயிலாடுதுறையில் 120 ஆண்டுகள் பழமையான பள்ளி கட்டிடத்தை இடிக்கும் பணி விரைவில் துவங்க இருப்பதால் பழைய மாணவர்கள் பள்ளியை சுற்றிப்பார்க்க இரண்டு நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் மாணவர்கள் கண்ணீருடன் பார்வையிட்டு புகைப்படம் எடுத்து மலரும் நினைவுகளில் திளைத்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த டி.பி.டி.ஆர் தேசிய மேல்நிலைப்பள்ளி எனப்படும் திவான் பகதூர் தி.அரங்காச்சாரியார் தேசிய மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. 1900ம் ஆண்டு கோமல் சீனிவாசராகவ ஐயங்கார் என்பவரால் திண்ணைப்பள்ளியாக துவக்கப்பட்டு பின்னர் சிறிய கட்டிடத்தில் 1902ம் ஆண்டு முறைப்படி பள்ளி துவங்கப்பட்டது. பின்னர் 1949ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 1954ம் ஆண்டு முதல் பிரமாண்டமான மாடிக்கட்டிடத்தில் பள்ளி இயங்கியது.

மயிலாடுதுறை சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமப்புறங்களை சார்ந்த மாணவர்கள் பயிலும் இந்த பள்ளி கடந்த 120 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படித்த பலர், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உயர் பதவி வகித்து வருகின்றனர். முன்னாள் மாணவர்களின் நிதி உதவியுடன், பழைய பள்ளிக்கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்காக பள்ளிக்கட்டிடம் இடிக்கும் பணி மார்ச்முதல் துவங்க உள்ளது என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பள்ளியை சுற்றிப்பார்க்க, இரண்டு நாட்களுக்கு முன்பு நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இதனையடுத்து, பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், பள்ளிக்கு வந்திருந்து தாங்கள் பயின்ற வகுப்பறைகளில் அமர்ந்தும், புகைப்படம் எடுத்தும் மலரும் நினைவுகளில் ஆழ்ந்தனர். தங்கள் பள்ளிக்கட்டிடம் இடிக்கப்படுவது ஒரு புறம் வருத்தமாக இருந்தாலும், காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப புதிய கட்டிடம் கட்டப்படுவது மகிழ்ச்சியாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Young People ,
× RELATED இளைஞர்களுக்கெல்லாம்...