தூத்துக்குடியில் தொழிலாளி, கண்டக்டருக்கு கத்திக்குத்து

தூத்துக்குடி, பிப். 25:தூத்துக்குடியில் தொழிலாளி, கண்டக்டருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி வள்ளிநாயகபுரத்தை சேர்ந்தவர்  கணேசன். இவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காந்திமதி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். காந்திமதி, கணேசனின் சகோதரரான ஓட்டல் உரிமையாளர்  வீரபாகு (29) என்பவரது வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இதற்கு காந்திமதியின் சகோதரர் டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான கோபி (32) எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக  கோபி மற்றும்  வீரபாகு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வீரபாகு, கோபியை  கத்தியால் குத்தினார். பலத்த காயமடைந்த கோபி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தென்பாகம் போலீசார்,  வீரபாகு மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மற்றொரு சம்பவம்: தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் சுதாகர் (23).

மினிபஸ்சில்  கண்டக்டராக உள்ளார்.  நேற்று முன்தினம் தாளமுத்துநகரில் இருந்து பழைய பஸ் நிலையம் வந்த பஸ்சில் பணியில் இருந்துள்ளார். அப்போது பஸ்சில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த இருவர், சுதாகருடன் தகராறில் ஈடுபட்டனர். பழைய பஸ் நிலையத்தில் பஸ் வந்த போது மீண்டும் அவர்களுக்குள்  தகராறு ஏற்பட்டது. இதில் அவர்கள் இருவரும் சேர்ந்து  சுதாகரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினர். காயமடைந்த சுதாகர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிந்து தூத்துக்குடி திரவியபுரத்தைச் சேர்ந்த  சக்திகுமார் (19), மில்லர்புரத்தைச் சேர்ந்த  ஜெரின் (29) ஆகிய  இருவரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: