வாசுதேவநல்லூரில் சர்க்கரை ஆலையை விவசாயிகள் முற்றுகை

சிவகிரி, பிப். 25:  வாசுதேவநல்லூர் அருகே இயங்கும் தனியார் சர்க்கரைஆலையை   கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். வாசுதேவநல்லூர்- திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாசுதேவநல்லூர் அருகே செயல்படும் தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை முறையாக வழங்காததை கண்டித்து, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை ஆலை முன்பாக நடத்தி வந்தனர். பின்னர் கலெக்டர்  அறிவுறுத்தலின் பேரில் சிவகிரி தாலுகா  அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 30, நவம்பர் 13 ஆகிய தேதிகளில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆலை நிர்வாகம் நடந்துகொள்ளாததால் ஆலையை விவசாயிகள் நேற்று முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் முன்னிலைவகித்தார்.  

ஆலை முன்பு திரண்ட விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள்எழுப்பினர். போராட்டத்தில் ஆலைநிர்வாகம் 2018-19ம் ஆண்டு அரவை செய்த கரும்புக்கான நிலுவைத் தொகை ரூ.30 கோடியை 15 சதவிகித வட்டியுடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். 2004 முதல் 2008 வரை விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய லாபப் பங்குத்தொகை ரூ.10 கோடியை உடனே வழங்க வேண்டும். கரும்பு வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்களுடன் ஆலை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சு வார்த்தையில் எவ்வித சமரச முடிவுஎட்டப்படவில்லை. இவ்வாறு இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தொடரும் என மாநில துணைத்தலைவர் பழனிச்சாமி தெரிவித்தார்.

Related Stories: