உடுமலையில் விவசாயிகள் கடன் அட்டை பெற சிறப்பு மேளா இன்று நடக்கிறது

உடுமலை,பிப்.25:மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டத்தின்கீழ்,  ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் அனைத்து விவசாயிகளும் கிசான் கடன் அட்டை பெற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, விவசாயிகளுக்கு வங்கி கிளைகள் மூலம் கிசான் கடன் அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு மேளா மடத்துக்குளம் வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் குமரலிங்கம் துணை வேளாண் விரிவாக்க மையம் ஆகியவற்றில் இன்று (25ம் தேதி) நடக்கிறது.

விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நில ஆவணங்களுடன் அணுகலாம். மேலும் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்புக்கும் கிசான் கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. கடன் அட்டைகள் மூலம் விவசாயிகள் பயிர் சாகுபடி, கால்நடை மீன் வளர்ப்பு தொழிலை மேம்படுத்த வங்கி கடன் பெற வாய்ப்புள்ளது. அனைத்து தகுதியுள்ள விவசாயிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: