மகளிர் கல்லூரியில் அறிவியல் திருவிழா

உடுமலை,பிப்.25:தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், தேஜஸ் ரோட்டரி சங்கம், ராயல்ஸ் அரிமா சங்கம், ஜிவிஜி மகளிர் கல்லூரி அறிவியல் துறை மற்றும் கலிலியோ அறிவியல் சங்கம் சார்பில் ஒருநாள் அறிவியல் திருவிழா கல்லூரி அரங்கில் நடந்தது.

உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவரும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியருமான மணி வரவேற்றார். ஜிவிஜி மகளிர் கல்லூரி கணித துறை தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். தேஜஸ் ரோட்டர் சங்க தலைவர் ரவிஆனந்த் முன்னிலை வகித்தார். செயலர் சத்யம் பாபு, நிர்வாகி நாகராஜ், ராயல்ஸ் அரிமா சங்கத்தின் ராஜசுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவ மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினா போட்டிகள் நடந்தன. போட்டிகளை பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டஅலுவலர் சரவணன், கொடுவாயூர் ஆசிரியர் பயிற்சி மைய பேராசிரியர் கண்டிமுத்து ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மத்திய அறிவியல் தகவல் தொழில்நுட்ப துறை முன்னாள் செயலாளர் டி.ராமசாமியுடன் மாணவ, மாணவிகள் கலந்துரையாடினர்.

தொடர்ந்து காரைக்குடி சிஎஸ்ஐஆரை சேர்ந்த விஞ்ஞானி சுதாகர் ஆராய்ச்சி துறையில் இந்தியாவின் வளர்ச்சி பற்றி பேசினார். மடிப்பு நுண்ணோக்கி பயிற்சி பட்டறையை மதுரை ஈடன் அறிவியல் மன்றத்தின் பாண்டியராஜன், ராஜாங்கம் ஆகியோர் நிகழ்த்தினர்.நிறைவு விழாவில், மைவாடி விவேகானந்தா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மூர்த்தி, வரலாற்று ஆய்வு நடுவம் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் மற்றும் கணேசன், யோகானந்த், சுற்றுச்சூழல் சங்க நிர்வாகிகள் சசிக்குமார், சதீஷ்குமார் பங்கேற்றனர். போட்டிகளில் வென்றவர்களுக்கு கோட்டாட்சியர் ரவிக்குமார் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். முடிவில் சுற்றுச்சூழல் சங்க செயலர் நாகராசன் நன்றி கூறினார்.நிகழ்வை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் ஒருங்கிணைத்தார். 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: