×

அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி மூதாட்டியின் வீடு இடிப்பு

குன்னூர், பிப்.25: அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி கணவரை இழந்து வாழ்ந்து வந்த மூதாட்டியின் வீட்டினை கன்டோன்மென்ட் அதிகாரிகள் இடித்து சென்றனர் கன்டோன்மென்ட் பகுதியில் கூரை வீடுகள் கட்டவோ சிமென்ட் தளங்கள் அமைக்கவோ ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. கட்டிடங்கள் மற்றும் வீடுகள் கட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்ற பிறகு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடுத்தர மக்கள் அனுமதி பெறாமல் வீடுகளை புனரமைப்பு மற்றும் கால்நடைகளுக்கு தொழுவம், கழிப்பிடங்கள் அமைத்துள்ளனர். இது போன்ற அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டி வருவதாக கன்டோன்மென்ட் நிர்வாகத்திற்கு புகார் வந்துள்ளது. அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்  இதில் கன்டோன்மென்ட் நிர்வாக கவுன்சிலர்களின்  வீடுகள் முதல் 32 வீடுகளில் அனுமதியின்றி வீடுகள் கட்டி வந்துள்ளது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் கன்டோன்மென்ட் நிர்வாக அதிகாரி பூஜா பளிச்சா உத்தரவின் பேரில் ஒரே நேரத்தில் ஏழு வார்டுகளில் வீடுகளை இடிக்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.

இதில் சிங்கார தோப்பு  பகுதியில் கணவரை  இழந்து வாழ்ந்து வரும் 82 வயது மூதாட்டியான சார்லினா என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. இதே போன்று சின்னவண்டிச்சோலை  பகுதியில்  மேரி என்பவரது  வீட்டில் உள்ள உபகரணங்களை வெளியேற்றி வீட்டினை இடித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திமுக மற்றும் அதிமுக வினர் அந்த பகுதியில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் வீடுகளை இடிக்காமல் விட்டு சென்றனர். அனுமதியின்றி கட்டப்பட்ட 32 கட்டிடங்களில் வயதான முதியோரின் வீடுகளை அதிகாரிகள் இடித்து சென்றுள்ள சம்பவம் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : demolition ,house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்