×

அரசு பேருந்தை முறையாக இயக்க கோரி கலெக்டர் அலுவலகத்தை மக்கள் முற்றுகை

ஊட்டி, பிப். 25:அரசு பேருந்தை முறையாக இயக்க கோரி ஊட்டி அருேகயுள்ள முட்டிநாடு கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பெரும்பாலான கிராமங்கள் தொலை தூரங்களில் உள்ளன. அதேசமயம், மலைப்பங்கான பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் அமைந்துள்ளது. இது போன்ற பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு பஸ்கள் இயக்குவதால்,  டீசல் செலவு சமவெளிப் பகுதிகளை காட்டிலும் அதிகம். மேலும், குறைந்த பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்லும் சிறிய பஸ்கள் மட்டுமே இயக்க முடியும். இருந்த போதிலும், சேவை அடிப்படையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து கழகம் அனைத்து கிராமங்களுக்கும் பஸ்களை இயக்கி வந்தது. இதன் மூலம் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு செல்பவர்கள் பயன் அடைந்து வந்தனர். கடந்த பல ஆண்டுகளாகவே ஊட்டி போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இருந்து வருகிறது.

ஆனால், தற்போது டீசல் செலவு உயர்ந்த நிலையில் நாளுக்கு நாள் நஷ்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் செலவையும், நஷ்டத்தை குறைக்க கோரி இங்கு பணியாற்றும் அதிகாரிகளை நிர்பந்திக்கின்றனர். இதனால், இங்குள்ள அதிகாரிகள் தற்போது ஏற்கனவே பல வழித்தடங்களில் இயக்கப்படு வந்த பஸ்களை ரத்து செய்துவிட்டனர். மேலும், பல கிராமங்களுக்கு சென்ற டிரிப்களை ரத்து செய்விட்டனர். பெரும்பாலான கிராமங்களுக்கு தற்போது அரசு பஸ்கள் செல்வதில்லை. இதனால், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், குறித்த நேரத்திற்கு எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான கிராம மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். தங்களது கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பஸ்களை மீண்டும் இயக்க கோரி தற்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து கழகத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ஊட்டி அருகேயுள்ள முட்டிநாடு கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் தங்களது கிராமத்திற்கு முறையாக அரசு பஸ் இயக்க கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனு ஒன்றையும் அளித்தனர். தொடர்ந்து அவர்கள் கூறியாதவது, முட்டிநாடு கிராமத்தில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களது கிராமத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஒரு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் நாங்கள் பயன் அடைந்து வந்தோம். இந்நிலையில், எங்கள் கிராமத்திற்கு தற்போது முறையாக பஸ் இயக்கப்படுவதில்லை.

தற்போது இயக்கப்படும் பஸ், பெரிய பஸ் என்பதால் எங்கள் கிராமத்தின் எல்லை வர வருவதில்லை. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இரவு நேர பஸ்சும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வன விலங்குகள் தொல்லை அதிகமாக உள்ளதால் அதிகரட்டி வரும் பஸ்சை எங்கள் கிராமம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.  இதே போன்ற பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Tags : collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...