கலெக்டர் அலுவலகத்தில் பெண்களுக்கான புகார் பெட்டி

கோவை, பிப். 25:  கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தினத்தையொட்டி பாலியல் ரீதியான புகார்களை தெரிவிக்கும் வகையில் பெண்கள் பாதுகாப்பு புகார் பெட்டி நேற்று வைக்கப்பட்டது. இதை மாவட்ட கலெக்டர் ராஜாமணி துவக்கிவைத்தார். இது குறித்து ராஜாமணி கூறுகையில்,  ‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினமான இன்று(நேற்று) குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தனியார் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், வியாபார இடங்கள் போன்ற பகுதிகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஏற்பட கூடிய பாலியல் மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச்சம்பவங்கள் குறித்து புகார் அளிப்பதற்காக அனைத்து இடங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பாக புகார் பெட்டி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய பெண்களுக்கு ஏற்படக்கூடிய குற்றச்சம்பவங்களை தெரிவிப்பதற்காக புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தினமும் இந்த புகார் பெட்டியில் வரக்கூடிய மனுக்களை பார்த்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் குற்றங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம், சமூகநலத்துறை, காவல்துறை இணைந்து செயல்பட்டு வருகிறது. புகார்கள் உறுதி செய்யப்படும் நபர்கள் தண்டிக்கப்படுகின்றனர். பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது,’’ என்றார்.

Related Stories: