உரிமம் பெறாமல் விதிமுறை மீறி முறைகேடாக பஸ் நிலையங்களில் வணிக கடைகள்

கோவை, பிப்.25: கோவை நகரில் உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையங்கள், மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் பிரதான ரோடுகளை ஒட்டியுள்ள இடங்களில் வியாபார கடைகள் அதிகளவு உள்ளது. போக்குவரத்திற்கும், பயணிகளுக்கும் இடையூறு இல்லாத வகையில் வணிக கடைகளுக்கு அனுமதி வழங்கவேண்டும். ஆனால் மாநகராட்சி நிர்வாகம், சில வணிக கடைகளுக்கு விதிமுறை மீறி அனுமதி வழங்கியிருப்பதாக தெரிகிறது. அனுமதி பெற்ற பொருட்களுக்கு மாறாக, வேறு பொருட்களை கடைகளில் விற்பனை செய்வதும் நடக்கிறது. புத்தக கடைகளில் பீடி, சிகரெட், விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளை சிலர் முறைகேடாக பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. ஆவின் பால், டேன்டீ கடைகளில் அனுமதியில்லாத பொருட்கள் விற்பனை செய்வதும் நடக்கிறது. இந்த கடைகளை முறைப்படுத்தவும், அனுமதி பெறாத கடைகளை அகற்றவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிலர், பஸ் நிலையத்தில் சொந்த செலவில் ரூபிங் சீட் கட்டுமானங்களை ஏற்படுத்தியுள்ளனர். பஸ் நிலையம், நடைபாதை, பொது இடங்கள், ரோட்டோர வணிக கடைகளுக்கு அனுமதி வழங்குவதில் போலீஸ், மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறைகளில் முறைகேடு நடப்பதாக தெரியவந்துள்ளது. கடைகளை ஒதுக்கீடு செய்ய பணம் வாங்குவதும் நடக்கிறது. அனுமதியின்றி அரசியல் கட்சிகளின் ஆதரவில் சிலர் கடைகளை வைத்து காலி செய்ய மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சிலர் மாமூல் வசூலித்து வருகின்றனர்.  மெயின் ரோட்டை ஒட்டியுள்ள இடங்களில் நெடுஞ்சாலைத்துறை இடங்களில் கடைகள் அதிகரித்துள்ளன. ஆக்கிரமிப்பு, இடையூறு கடைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அளித்தால் யாரும் கண்டுகொள்வதில்லை. மாநகராட்சியில் ரிசர்வ் சைட் மீட்கும் பணி நடக்கவில்லை. மாநகராட்சி இடங்களில் அத்துமீறப்படும் கட்டுமானங்கள், வர்த்தக செயல்பாடுகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஆக்கிரமிப்பு கடைகளுக்கு அதிகாரிகள் சிலர்  ஆதரவு அளிக்கின்றனர். ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் ரோட்டோர கடைகளில் சில போலீசாருக்கு கணிசமான மாமூலும், தேவையான பொருட்களும் கிடைக்கிறது. இதன் காரணமாக போலீசார் ஆக்கிரமிப்பு கடைகளை கண்டுகொள்வதில்லை. போக்குவரத்து போலீசார் விபத்தை தடுக்க, போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆலோசனை நடத்தினர். அப்போது ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இது குறித்து நுகர்வோர், தன்னார்வ அமைப்பினர் கூறுகையில், ‘‘பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் விதிமுறை மீறல், முறைகேடு பரவலாகி விட்டது. பஸ் நிலையத்திற்குள் பஸ் சென்று வர முடியாத நிலையிருக்கிறது.

கடைகளில் முறைகேடு நடக்கிறது. உரிமம் இல்லாமல் பலர் கடை நடத்துகிறார்கள். நடைபாதை, பொது இடங்கள், மழை நீர் வடிகால் போன்றவற்றை மூடி கடைகள் அமைத்து விட்டனர். இதுபோன்ற நிலையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வரவில்லை. கடந்த சில ஆண்டாக பஸ் ஸ்டாண்ட் பகுதி ஆக்கிரமிப்பு, விதிமுறை மீறல் கடைகள் அகற்றப்படவில்லை. மார்க்கெட் பகுதிகளிலும் இதே நிலைதான் இருக்கிறது. இவற்றை சரி செய்யாமல் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க முடியாது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றனர்.

Related Stories: