பவானி கூடுதுறையில் புனித நீராட எல்லை தாண்டும் பக்தர்கள்

பவானி, பிப். 25:  பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்த அளவே செல்வதால், புனித நீராட பக்தர்கள் எல்லை தாண்டி செல்கின்றனர். இதனால் நீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. காவிரி ஆற்றில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் மிகக்குறைந்த அளவே திறக்கப்படுவதால், ஆங்காங்கே வறண்டு போய் பாறைகளாக காட்சியளிக்கிறது. ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றுடன் பவானி ஆறு கலக்கிறது. மேலும், இங்கு கண்ணுக்குப் புலப்படாத அமுத நதியும் காவிரியுடன் சங்கமிப்பதாக கூறப்படுகிறது. இதனால், மூன்று நதிகள் சங்கமிக்கும் கூடுதுறை புகழ்பெற்ற பரிகார தலமாகவும், புண்ணிய தலமாகவும் விளங்கி வருகிறது. தற்போது பவானி மற்றும் காவிரி ஆறுகளில் தண்ணீர் இல்லாததால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டை போன்று காட்சி அளித்து வருகிறது. இதனால், புனித நீராட வரும் பக்தர்கள், பரிகார வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் தண்ணீரைத் தேடி காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று வருகின்றனர்.

கடினமான பாறைகளும், ஆழமும் நிறைந்துள்ள காவிரி ஆற்றில் வெளியூரிலிருந்து குடும்பத்துடன் வரும் பக்தர்கள் ஆபத்தை உணராமல் உற்சாகமாக குளிக்க செல்கின்றனர். பக்தர்கள் குளிக்கும் பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் உள்ளது. இதனால், கோயில் நிர்வாகம் படித்துறையில் கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி நீராட ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஆனாலும், தொட்டித் தண்ணீரில் நீராட விரும்பாத பக்தர்கள் கூட்டம், கூட்டமாக ஆழமான பகுதிக்கு செல்கின்றனர். நீச்சல் தெரியாத பக்தர்கள் தண்ணீரின் ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் பக்தர்கள் எச்சரிக்கையை மீறி ஆற்றின் ஆழமான பகுதிக்குச் செல்வது தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: