வெண்டிபாளையத்தில் குப்பைகளை உரமாக்கும் பணி முன்னோட்டம்

ஈரோடு,  பிப். 25:   ஈரோடு வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கில் ராட்சத சல்லடை இயந்திரம்  மூலமாக குப்பைகள் பிரித்து உரமாக்கும் பணிக்கான முன்னோட்டம் நடந்து  வருகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 வார்டுகளில்  சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வைராபாளையம் மற்றும் வெண்டிபாளையம்  குப்பைக்கிடங்குகளில் சேகரிக்கப்பட்டு வந்தது. இதனால் சுற்றுச்சூழல்  மாசடைந்து வருவதாகவும், இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக காவிரி ஆற்றின்  கரையோரத்தில் உள்ள வைராபாளையம் குப்பைக்கிடங்கை அகற்ற முடிவு செய்யப்பட்டது.  இதற்காக ரூ.37.25 கோடி மதிப்பீட்டில் ராட்ச சல்லடை இயந்திரம்  அமைக்கப்பட்டு குப்பைகளை உரமாக்கும் பணிகள் துவங்கியது. இதனைத்தொடர்ந்து வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கில் உள்ள குப்பைகளை உரமாக்கும் பணி  துவங்கப்படவுள்ளது. தற்போது இந்த குப்பை கிடங்கில் ராட்சத சல்லடை இயந்திரங்களை வைத்து குப்பைகளை உரமாக்க முன்னோட்டம் நடந்து வருகிறது.  இதற்காக தினசரி 850 டன் குப்பைகள் அகற்றப்பட்டு உரமாக்கப்பட்டு வருகிறது.  தற்போது முன்னோட்டம் நடந்து வரும் நிலையில் மார்ச் 1ம் தேதி முதல் பணி  முழுமையாக துவங்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது  குறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி  பகுதிகளில் பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட குப்பைகள் வைராபாளையம்,  வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு குவித்து  வைக்கப்பட்டிருந்தது. இதை அகற்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள்  துவங்கப்பட்டது. வைராபாளையம் குப்பை கிடங்கில் 1.30 லட்சம் கியூபிக்  மீட்டர் குப்பையும், வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் 4 லட்சம் கியூபிக்  மீட்டரும் குப்பைகள் உள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தின்கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ராட்ச இயந்திரங்கள்  அமைக்கப்பட்டு கிடங்கில் குப்பைகள் அகற்றும் பணி நிறைவடையும் தருவாயில்  உள்ளது. இதனை தொடர்ந்து வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை  அகற்றும் பணிக்கான முன்னோட்டம் துவங்கியுள்ளது. இங்கு தினசரி 750 முதல் 850  டன் குப்பைகள் தற்போது அரைக்கப்பட்டு உரமாக்கப்பட்டு வருகிறது. இதற்கான  பணிகள் மார்ச் 1ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது. தற்போது 75 ஆயிரம்  கியூபிக்  மீட்டர் குப்பைகள் அகற்றப்பட்டு உரமாக்கப்பட்டுள்ளது.

மேலும் 18  மாதங்களில் வெண்டிபாளையத்தில் உள்ள குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு  விடும். தற்போது மாநகராட்சி பகுதிகளில் வீடு, வீடாக சென்று பிளாஸ்டிக்  கழிவுகள், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்து  பெறப்படுகிறது. குப்பைகளை வாங்குவதற்காக பேட்டரி கார்கள் வழங்கப்பட்டு அதன்  மூலமாக குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள்  மாநகராட்சி பகுதிகளில் உள்ள 19 மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் மூலமாக  பிரிக்கப்பட்டு உரமாக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சி பகுதிகளில்  சேரும் குப்பைகள் அளவும் குறைந்துள்ளது. இவ்வாறு ஆணையாளர் இளங்கோவன்  தெரிவித்தார்.

Related Stories: