×

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை புதுக்கோட்டையில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க வேண்டும்

புதுக்கோட்டை, பிப்.25: புதுக்கோட்டையில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க வேண்டும் என வாழ்வுரிமை கட்சியினர் கலெக்டரிடம் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் கட்சியினர் மரக்கன்றுகளுடன் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை சுற்றியுள்ள வனக்காடுகளை அழித்துவிட்டு, தைலமரங்களை வனத்துறையினர் வளர்த்து வருகின்றனர். இந்த தைலமரக்காட்டிற்குள் இருந்த பாம்புகள், குரங்கு, மயில், மான் மற்றும் பல வன விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி சாலைகளில் உள்ள மரங்களில் வசித்து வருகின்றன.

கஜா புயல் தாக்கியபோது அதிக அளவில் மரங்கள் சாய்ந்ததாலும், குரங்குகள் வசித்த வந்த இடத்தில் உள்ள மரங்களை அகற்றிவிட்டு மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டன. இதனால் குரங்குகள் இருக்க இடம் இல்லாமல் சாலையில் சுற்றித்திரிவதால் வாகனங்களில் அடிப்பட்டு இறந்து வருகின்றன. சில குரங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றனர். எனவே வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் புதுக்கோட்டையில் பல வகையான கனிகளை தரக்கூடிய மரங்களை உருவாக்கி வனவிலங்கு சரணாலயம் அமைக்க வேண்டும் எனஅதில் கூறியுள்ளனர்.

Tags : activists ,Pudukkottai ,wildlife sanctuary ,
× RELATED கோடியக்கரை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்