×

குஜிலியம்பாறை தாலுகா ஆபிஸ்க்கு இடம் தேர்வு தாசில்தார்கள் ஆய்வு

குஜிலியம்பாறை, பிப். 25: குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு தேர்ந்தெடுத்த இடத்தினை தாசில்தார்கள் ஆய்வு செய்தனர். குஜிலியம்பாறையில் கடந்த 2019 ஜூலை 1ம் தேதி முதல் தாலுகா அலுவலகம் செயல்பட தொடங்கியுள்ளது. இத்தாலுகாவிற்குட்பட்ட பாளையம், கோட்டாநத்தம், கோவிலூர் ஆகிய 3 குறுவட்டங்களில் உள்ள 24 கிராமமக்கள் பட்டா மாறுதல், பட்டா மாறுதல் உட்பிரிவு, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட அனைத்து வகையான சான்றிதழ்கள் உள்ளிட்ட தங்களின் மனுக்களை கொடுத்து பயன்பெற்று வருகின்றனர். தாலுகா அலுவலகம் தற்காலிகமாக குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்ய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தாலுகா அலுவலகம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, குஜிலியம்பாறையில் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ள இடத்தை ஒட்டியவாறு சர்வே எண் 1718:1ல் ஒரு ஏக்கர் அரசு புறம்போக்கு இடத்தை குஜிலியம்பாறை தாசில்தார் சிவசுப்பிரமணியன், வேடசந்தூர் தாசில்தார் ராஜேஸ்வரி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். பின்னர் அவர்கள், தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு போதுமான இடவசதி உள்ள இந்த இடத்தின் கோப்புகள் தமிழக அரசிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என தெரிவித்தனர். ஆய்வு பணியின் போது தேர்தல் துணை வட்டாச்சியர் பாண்டியராஜன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags : Kujiliyambara Taluk Office ,
× RELATED சுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்